உங்களுடன் ஒருவனாக நானும் இருப்பேன் என்ற குணம் கொண்டவர் சுவாமி கள்ளழகர்


கூரத்தாழ்வார், கள்ளழகர் பெருமான்

பகவத் ராமானுஜரின் சீடர்களில் பிரதானமானவர் சுவாமி கூரத்தாழ்வான். மதுரை அருகே திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோவில்) சில காலம் இவர் வசித்து வந்தார். அப்போது, திருமாலிருஞ்சோலை எம்பெருமானாகிய அழகர் பெருமான் பற்றி சுந்தரபாஹூஸ்தம் என்ற நூலை இயற்றினார். இதில் சுவாமி கள்ளழகரின் வஸ்திரம், யாத்திரை உள்ளிட்டவைகள் பற்றி மிக விரிவாக கூறியிருக்கிறார். அதில், "நீ எந்த ஜாதியாக இருக்கிறாயோ, நீ எந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்கிறாயோ அங்கிருந்து என்னை அன்போடு அழைத்தால், அந்த கூட்டத்தில் உங்களுடன் ஒருவனாக நானும் இருப்பேன் என்ற குணம் கொண்டவர் சுவாமி கள்ளழகர். அதனாலேயே பலதரப்பட்ட பக்தர்களும் அன்புடன் வழங்கும் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டு அனைவருக்கும் அருள் செய்கிறார்” என்று நெகிழ்ந்திருக்கிறார்.

வைகையாற்றில் கள்ளழகர்

பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும் கோவில் மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மட்டும்தான் பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும். ஆனால், மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்மலையில் இருந்து சுவாமி கள்ளழகர் புறப்பட்டு, மீண்டும் மலைக்கு திரும்பும் வரை ஏராளமான மண்டகப்படிகளில் படைக்கப்படும் பலவிதமான பிரசாதங்களை எம்பெருமான் ஏற்றுக் கொள்கிறார். அத்துடன் எளியாருக்கு எளியனாக, பக்தர்களை தேடிச் சென்று நலம் விசாரிப்பது போல் மண்டகப்படிகளில் எழுந்தருளி, பக்தர்கள் கூட்டத்துடன் அவரும் சேர்ந்து வைகையாற்றில் இன்று (மே 5-ம் தேதி) இறங்குகிறார். இது பகவானின் நீர்மைக் குணத்தைக் காட்டுகிறது.

x