ஆடி அமாவாசை | காவிரியாற்றில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல் @ திருவையாறு


திருவையாறு காவிரி படித்துறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடிய பக்தர்கள் | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்.

தஞ்சாவூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு காவிரி ஆற்றில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு காவிரியாற்றின் புஷ்பபடித்துறையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் ஏராளமானோர் குவிந்தனர். அங்குள்ள புரோகிதர்களிடம் பக்தர்கள், தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து அவர்களது ஆன்மா சாந்தி அடைய தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் காவிரி ஆற்றில் மூழ்கி புனித நீராடினர்.

காவிரி ஆற்றில் நீர் அதிகளவில் செல்வதால் யாரும் நீரில் மூழ்கி விடாதபடி அங்கு, தீயணைப்புத்துறை வீரர்கள், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொதுமக்கள் புனித நீராட பேராரூட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் நண்பகல் காவிரி ஆற்றின் கரையில் எழுந்தருளினார். இதையடுத்து அஸ்திரதேவருக்கு மஞ்சள், பால், தயில், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பொதுமக்களும் காவிரி ஆற்றில் புனித நீராடினர். தொடர்ந்து ஐயாறப்பர், அம்பாளுடன் நான்கு வீதிகளுக்கும் வீதியுலா சென்று கோயிலை அடைந்தார்.

அப்பர் கயிலை காட்சி: அப்பர் பெருமானுக்கு சிவபெருமான் ஆடி மாத அமாவாசை நாளில் திருவையாறில் காட்சி கொடுத்ததாக ஐதீகம். எனவே ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் தென்கயிலாயக் கோயிலில் அப்பர் கயிலை காட்சி நடைபெறுகிறது.

ஆடி அமாவாசை தினம் என்பதால் இன்று திருவையாறில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதனால் போக்குவரத்து மாற்றப்பட்டு, போலீஸார் பாதுகாப்பா பணியில் ஈடுபட்டனர்.

x