ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குற்றாலத்தில் குவிந்த மக்கள்


தென்காசி: ஆடி அமாவசையை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குற்றாலம் பிரதான அருவிக்கரையில் பொதுமக்கள் குவிந்தனர். அருவியில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதனால் குற்றாலத்தில் கூட்டம் அலைமோதியது.

ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் அவர்களின் ஆன்மா சாந்தியடைந்து, சந்ததிகளின் வாழ்வு செழிக்கும் என்பது நம்பிக்கை. இதனால் இந்த இரண்டு தினங்களில் கடல், நதி, அருவிகளில் நீராடி முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

அதன்படி, ஆடி அமாவாசை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி மாவட்டம், குற்றாலம் பிரதான அருவிக்கரையில் அதிகாலையில் இருந்து ஏராளமானோர் தர்ப்பணம் செய்ய குவிந்தனர். அருவியில் நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

விடுமுறை தினமான இன்று சாரல் சீஸன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் அதிகமாக இருந்தது. அத்துடன் ஆயிரக்கணக்கானோர் குற்றாலம் பிரதான அருவியில் தர்ப்பணம் செய்ய திரண்டதால் கூட்டம் அலைமோதியது.

நெரிசல் அதிகமாக இருந்ததால் முதியோர் அவதிப்பட்டனர். இதேபோல் தென்காசி சிற்றாறு, கடையம் அருகே கடனாநதி கரையிலும் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

x