குற்றாலம் அருவிகளில் ஏராளமானோர் நீராடினர் - களைகட்டியது ஆடிப்பெருக்கு விழா!


தென்காசி: ஆடி மாதம் 18-ம் நாளான இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. ஆடிப்பெருக்கு நாளில் பிரசித்தி பெற்ற நீர்நிலைகளில் சுமங்கலி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

குற்றாலம் பிரதான அருவி அருகே உள்ள செண்பக விநாயகர் கோயிலில் இருந்து பிரதான அருவிக்கரைக்கு ஊர்வலமாகச் சென்று லோபமுத்ரா, அகத்தியர் மற்றும் சித்தர்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

மேலும், அருவி நீரில் நறுமணப் பொருட்களை கலந்து அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பிரதான அருவியில் நீராடி, குற்றாலநாதர் சுவாமி கோயிலில் வழிபட்டனர்.

குற்றாலத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலி அருவியில் நீர்வரத்து நன்றாக இருந்தது. இன்று (சனிக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாகவும் இருந்தது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

x