கரூரில் குவியும் பக்தர்கள்... நாளை தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!


கரூர் மாவட்டம் மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயில். (கோப்புப் படம்)

கரூர்: மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவில் நாளை ஆகஸ்ட் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வைபவம் நடக்க இருக்கிறது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா சனிக்கிழமை (ஆக.3) காலை 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையுடன் தொடங்கியது. விழாவில் இரவு 8 மணிக்கு மேல்காவிரி ஆற்றில் அம்மன் தீர்த்தவாரிக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 4) காலை 9 மணிக்கு மேல், வேண்டுதல் வைத்துள்ள பக்தர்கள் நேர்த்திக்கடனாக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கரூரில் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் (பொ) ந.ராதிகா, கோயில் செயல் அலுவலர் (பொ) கி.நரசிம்மன் செய்துள்ளனர். இந்த விழாவுக்காக கரூர், திருச்சி, முசிறி, மணப்பாறையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறன. விழாவையொட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஆடி 1-ம் தேதி முதல் விரதம் இருந்து வருகிறார்கள்.

பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குடிப்பாட்டுக்காரர்கள் நேற்று ஆகஸ்ட் 2ம் தேதி முதல் மேட்டுமகாதானபுரம் கோயிலுக்கு வரத்தொடங்கியுள்ளனர்.

x