ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை


ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு இன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா ஜுலை 29 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 14 வரையிலும், மொத்தம் 17 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் ஐந்தாம் நாளான ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, 5 மணியளவில் ஸ்படிக லிங்க பூஜையும், தொடர்ந்து சாயரட்சை பூஜை, கால பூஜைகளும் நடைபெற்றன.

காலை 9 மணியளவில் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மேல் ராமநாதபுரம் சமஸ்தானம் சேதுபதி மகராணி ராஜேஸ்வரி நாச்சியார் கட்டளையின் சார்பாக நடராஜர் சன்னதி முன்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், இரவு 8 மணியளவில் நாயகர் வாசலில் தீபாராதனை முடிந்த அம்பாள் யானை வாகனத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஆகஸ்ட் 4ம் தேதி ஆடி அமாவாசை, ஆகஸ்ட் 6ம் தேதி தேரோட்டம், ஆகஸ்ட் 8-ல் ஆடிதபசு, ஆகஸ்ட் 9-ல் திருக்கல்யாணம், ஆகஸ்ட் 14ம் தேதி கெந்தனமாதன பர்வதம் மண்டபகப்படிக்கு எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

x