தென்காசி: தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கூடலூர் கிராம ஊராட்சியில் மலைப் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த நாதகிரி முருகன் கோயில் அமைந்துள்ளது.
மலையடிவாரத்தில் விநாயகர் கோயிலும், மலையின் மேல் முருகன் கோயிலும் உள்ளன. இந்த மலையைச் சுற்றிலும் வயல்வெளிகள் சூழ்ந்துள்ளன. மலை மேல் உள்ள கோயிலுக்கு செல்ல மலைப் பகுதியில் கற்களால் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கோயிலுக்கு செல்லும் தார் சாலை முற்றிலும் சிதைந்து கிடக்கிறது. கற்கள் பெயர்ந்து சாலை இருந்ததற்கான சுவடே தெரியாத அளவுக்கு உள்ளது.இதனால் நாதகிரி முருகன் கோயிலுக்கு சென்று வரும் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் சாலையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், உடனடியாக புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, வாசுதேவநல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ் கூறும்போது, “நாதகிரி முருகன் கோயிலுக்கு செல்லும் பாதையில் கடந்த 2014-15-ம் ஆண்டில் மாவட்ட ஊராட்சி திட்டநிதி மூலம் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. சாலை முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. கற்கள் நிறைந்து காணப்படுவதால் வாகனங்களில் செல்வதற்கு பெரிதும் சிரமமாக உள்ளது. இதனால் பக்தர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஏராளமான விவசாயிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே புதிதாக தார் சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்” என்றார்.