வறண்டு காணப்படும் தென்பெண்ணையாறு - களையிழந்த ஆடிப்பெருக்கு விழா!


வறண்ட நிலையில் காணப்படும் தென்பெண்ணையாற்றில் அமைந்துள்ள சென்னம்மாள் கோயில்.

அரூர்: தென்பெண்ணையாறு வறண்டு காணப்படுவதால் அரூர் அருகே சென்னம்மாள் கோயில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுவதாக பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள வேடகட்டமடுவு ஊராட்சிக்குட்பட்ட டி.அம்மாப்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சென்னம்மாள் கோயில் அமைந்துள்ளது. தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இடையில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் நடுவில் பாறையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழாவிமரிசையாக நடைபெறும்.

விழாவில், தருமபுரி, கிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள். தென்பெண்ணை ஆற்றில் நீராடி அம்மனை வழிபட்டுச் செல்வார்கள்.

நிகழாண்டு ஆடிப்பெருக்கு விழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நாளான நாளை (3-ம் தேதி) ஆடிப் பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், தென்பெண்ணை யாற்றில் நீர் வரத்து இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என பலதரப்பு மக்களும், பக்தர்களும், விழா குழுவினரும் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அணையில் இருந்து நீர்திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், இதுவரை ஆற்றில் நீர் திறக்கப்படவில்லை. இது பக்தர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் சென்னம்மாள் கோயில் அறக்கட்டளை சார்பில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கிணறுகளில் இருந்து தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு பக்தர்கள் குளிப்பதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என கோயில் நிர்வாகி பாஸ்கர் தெரிவித்தார். இது தவிர ஆடிப்பெருக்கு விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிக்கள் வேடகட்டமடுவு ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ஊராட்சித் தலைவர் ராணிமுத்து, ஊராட்சி செயலர் பிரகாஷ் ஆகியோர் கூறுகையில், சென்னம்மாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, ஆடி மாதம் முழுவதும் டி.அம்மாப்பேட்டை பகுதியில் தற்காலிக வாகன நிறுத்தமிடம், சுத்தகரிக்கப் பட்ட குடிநீர் வசதிகள், கழிப்பறைகள் மற்றும் சுற்றுப்புறத் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றனர்.

x