சதுரகிரியில் குவிந்த 7,000+ பக்தர்கள் - அடிப்படை வசதிகள் இன்றி அவதி


சதுரகிரி சுந்த ரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் முதல் நாளான நேற்று பிரதோஷ வழிபாட்டுக்காக மலையேறிச் சென்ற பக்தர்கள்.

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் நேற்று பிரதோஷத்தையொட்டி 7 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 முதல் 5-ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதில் ஆகஸ்ட் 1-ம் தேதி பிரதோஷ சிறப்பு பூஜையும், ஆகஸ்ட் 2-ம் தேதி சிவராத்திரி சிறப்பு வழிபாடும், 3-ம் தேதி ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜையும், ஆகஸ்ட் 4-ம் தேதி ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

நேற்று பிரதோஷத்தை யொட்டி காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 7 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முதல் நாளான நேற்று குறைவான பக்தர்கள் வந்தபோதும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

தாணிப்பாறை விலக்கில் இருந்து சதுரகிரி அடிவாரமான வனத்துறை நுழைவு வாயிலுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், பக்தர்கள் 2 கி.மீ. தூரம் நடந்து சென்றனர். அடிவார பகுதியில் குளியல் அறை மற்றும் உடை மாற்றும் அறைகள் இல்லாததால் பெண்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

மலை அடிவாரத்தில் மட்டுமே மருத்துவக் குழுவினர் இருந்தனர். மலைப்பாதைகளில் உள்ள மருத்துவ முகாம்களில் யாரும் இல்லை. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆடி அமாவாசை அன்று மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் செல்வர் என்பதால் மலைப்பாதையில் மருத்துவ முகாம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x