திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எண்கண் பிரம்மபுரீஸ்வரர் கோயில், சிவபெருமானுக்குரிய கோயிலாக இருந்தாலும், இங்கு சுப்பிரமணிய சுவாமியே பிரதான மூர்த்தியாக போற்றப்படுகிறார். திருவாரூரில் இருந்து 13 கி.மீ தொலைவில் எண்கண் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
பங்குனி மாதத்தில் இக்கோயிலில் பிரம்மபுரீஸ்வரர் மீது மூன்று நாட்களுக்கு சூரியக் கதிர்கள் படும் என்பது தனிச்சிறப்பு.
தல வரலாறு
ஒரு சமயம், பிரணவ மந்திரத்தின் பொருள் குறித்து விளக்கம் அளிக்க பிரம்மதேவரிடம் கேட்டார் முருகப் பெருமான். பிரம்மதேவரால் தெளிவான விளக்கம் அளிக்க இயலாததால், சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பிரம்மதேவர் செய்து வந்த படைப்புத் தொழிலை, முருகப் பெருமான் தொடர்ந்தார். மிகவும் வருத்தத்தில் இருந்த பிரம்மதேவர், சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். தனது எட்டு கண்களால், அவரை அர்ச்சித்தார்.
பிரம்மதேவரின் தவம் மற்றும் அர்ச்சனையில் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு காட்சிகொடுத்தார். பிரம்மதேவர் அவரிடம் நடந்தவற்றைக் கூறி, தனது படைத்தல் தொழிலை திரும்பப் பெற்றுத் தருமாறு வேண்டினார். உடனே சிவபெருமான், முருகப் பெருமானை அழைத்து, படைத்தல் தொழிலை பிரம்மதேவரிடமே ஒப்படைக்கப் பணிக்கிறார்.
பிரணவ மந்திரத்தின் உட்பொருளைக் கூட அறியாத பிரம்மதேவர், படைத்தல் தொழிலைப் புரிவது முறையல்ல என்று கூறி, முருகப் பெருமான் சிவபெருமானின் வேண்டுகோளை ஏற்க மறுக்கிறார். முருகப் பெருமானை சமாதானப்படுத்த எண்ணிய சிவபெருமான், முன்பு தனக்கு பிரணவ மந்திர உபதேசம் செய்தது போல் பிரம்மதேவருக்கும் உபதேசம் செய்ய வேண்டுகிறார். அப்படியே படைத்தல் தொழிலையும் பிரம்மதேவரிடமே ஒப்படைக்கும்படி கூறுகிறார்.
முருகப் பெருமானும் சிவபெருமானின் வேண்டுகோளை ஏற்று, தெற்கு முகமாக அமர்ந்து கொண்டு, பிரம்மதேவருக்கு பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கிறார். பின்னர் படைப்புத் தொழிலையும் பிரம்மதேவரிடமே ஒப்படைக்கிறார் முருகப் பெருமான்.
பிரம்மதேவர் தனது எட்டுக் கண்களால் (எண்கண்) சிவபெருமானை பூஜித்ததால், இத்தலம் பிரம்மபுரம் என்று வழங்கப்படுகிறது.
ஞானகாரகன்
எண்கண் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் முருகப் பெருமான், தெற்கு முகமாக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. மேலும், நடராஜர் அம்சத்துடன், முருகப் பெருமான் காட்சி அருள்வதால், இவர் இருக்கும் சந்நிதி, சபை என்றே அழைக்கப்படுகிறது. தென்திசைக் கடவுள் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் அதே திசை பார்த்து ஞானகாரகனாகவும், தென்திசையான எமதிசையை நோக்கி காலசம்ஹார மூர்த்தி போல் ஆயுள், ஆரோக்கியகாரகனாகவும் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். இதனால் அறிவு, ஆயுள், ஆரோக்கியம் போன்ற அரும்பேறுகளை அடியார்களுக்கும் பக்தர்களுக்கும் அளிப்பவராக முருகப் பெருமான் போற்றப்படுகிறார். அறிவு, ஞானம், ஆரோக்கியம், ஆயுள், கண் பார்வை ஆகியவற்றைப் பெற பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
சண்முகார்ச்சனை
கண் பார்வை குறைந்தவர்கள் ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் விசாக நட்சத்திர தினத்தில் தொடர்ந்து 12 மாதங்கள் சண்முகார்ச்சனை செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். அன்றைய தினத்தில் அதிகாலை வேளையில் பக்தர்கள் குமார தீர்த்தத்தில் நீராடி சண்முகார்ச்சனை செய்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், கண் பார்வைக் குறைபாடு சீராகும் என்பது ஐதீகம்.
ஆறுமுகப் பெருமான்
எண்கண் தலத்தில் மூலவர் முருகப் பெருமான் தனியாக மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் ஆறுமுகப் பெருமானாக அருள்பாலிக்கிறார். அவருக்கு இருபுறத்திலும் வள்ளி, தெய்வானை தனியாக உள்ளனர்.
முன்புறம் 3, பின்புறம் 3 முகங்களும், பன்னிரு கரங்களில் வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவற்கொடி, அங்குசம் போன்ற ஆயுதங்களைக் கொண்டு ஆறுமுகப் பெருமான் காட்சியருள்கிறார். கை விரல்கள் தனித்தனியாக இடைவெளியுடன் செதுக்கப்பட்டுள்ளது. மேலும், முருகப் பெருமானின் எடை முழுவதையும் அவரைத் தாங்கி நிற்கும் மயிலின் இரண்டு கால்களே தாங்கிக் கொண்டிருக்கின்றன என்பது தனிச்சிறப்பு.
சிற்பி ஒருவர், சிக்கலில் ஆறுமுகனின் சிலையை வடித்தார். அதன் அழகைக் கண்டு ரசித்த சோழ மன்னர், அவரது கட்டை விரலை வெட்டிவிடுகிறார். கட்டை விரலை இழந்த சிற்பி, மற்றொரு சிலையை எட்டுக்குடியில் வடிக்கிறார். இதைக் கண்டு பொறுக்காத சோழ மன்னர், அவரது இரு கண்களைப் பறித்து விடுகிறார். கட்டை விரல், இரு கண்கள் ஆகியவற்றை இழந்த சிற்பி, ஒரு சிறுமியின் உதவியுடன் வன்னிமரங்கள் சூழ்ந்த வனத்தில் (சமீவனம்) முருகப் பெருமான் சிலையை வடிக்க எண்ணினார்.
அதன்படி கருங்கல்லில் ஆறுமுகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருப்பதுபோல் ஒரு சிலையை வடித்தார். முருகப் பெருமானுக்கு கண் திறக்கும் சமயத்தில், சிறுமியின் கையில் உளி பட்டு, குருதி பீறிட்டு, சிற்பியின் கண்களில் படுகிறது. குருதி கண்களில் பட்டதும் சிற்பி கண் பார்வை அருளப்படுகிறார். ‘என் கண்கள்’ கிடைத்துவிட்டன என்று அந்த சிற்பி மகிழ்ந்தார். இந்த சமீவனமே காலப்போக்கில் எண்கண் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கோயில் அமைப்பும் சிறப்பும்
இரண்டாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இத்தலத்தில் பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு சிவபெருமான் அருள்பாலிக்கிறார், இத்தலத்து விநாயகர் நர்த்தன கணபதி என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் பெரிய நாயகி என்ற பெயரால் போற்றப்படுகிறார்.
சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். இம்மூன்று சிலைகளையும் ஒரே சிற்பி வடித்தார் என்பது தனிச்சிறப்பு. இத்தலத்தைப் போற்றி அருணகிரிநாதர் திருப்புகழ் இயற்றியுள்ளார்.
எண்கண் நாட்டவருக்கு திருவாரூரில் மாளிகை
திருவாரூர் தியாகராஜ கோயிலின் இரண்டாவது பிரகாரத்தில் 1123-ம் ஆண்டில் விக்கிரம சோழரால் அமைக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. அதில் இங்கண் (எண்கண்) நாட்டைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆதிவிடங்கன் என்பவருக்கு திருவாரூரில் மாளிகை கட்டிக் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மனுநீதிச் சோழனின் அமைச்சராக இருந்த உபய குலாமலனின் வம்சாவளியில் வந்தவர் சந்திரசேகரன் ஆதிவிடங்கன். பசு நீதி கேட்டவுடன், தன் மகன் பிரியவிருத்தனை தேர்க்காலில் இட்டு கொல்ல வேண்டும் என்று அமைச்சருக்கு உத்தரவிடுகிறார் மனுநீதிச் சோழன். ஆனால் அமைச்சர் உபய குலாமலன், மன்னர் கூறியதை நிறைவேற்ற விரும்பாமல் தன்னைத் தானே வாளால் மாய்த்துக் கொள்கிறார். அவர் வம்சத்தில் வந்ததால் சந்திரசேகரன் ஆதிவிடங்கனுக்கு மாளிகை கட்டிக் கொடுத்தார் விக்கிரம சோழர்.
தைப்பூச கோலாகலம்
தைப்பூசத்தை முன்னிட்டு 14 நாட்களுக்கு இங்கே பிரம்மோற்சவ விழா, தேரோட்டத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தங்கள் தோள்களில் காவடி சுமந்து வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
ஒருசமயம் பிருகு முனிவரின் சாபத்தால் சிம்மவர்ம மன்னனின் சிங்கமுகம் மனித முகமாக மாறிவிடுகிறது. தான் மீண்டும் சிங்கமுகத்தைப் பெற வேண்டி, சிம்மவர்ம மன்னன், தினசரி வொட்டாற்றில் (விருத்த காவிரி) நீராடி, எண்கண் முருகப் பெருமானை வழிபட்டு வந்தார். சிம்மவர்ம மன்னனின் வழிபாட்டில் மகிழ்ந்த முருகப் பெருமான், பௌர்ணமி திதியுடன் கூடிய தைப்பூச நட்சத்திர தினத்தில், மயில் மீது அமர்ந்த கோலத்தில் அவருக்கு காட்சிதந்து, சாப விமோசனம் அளித்தார். இதனால் இங்கு தைப்பூச தினம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
திருவிழாக்கள்
தைப்பூச பிரம்மோற்சவம், ஐப்பசி கந்த சஷ்டி விழா (8 நாள்), ஆடி, கார்த்திகை, மாசி, தை மாத கார்த்திகை நட்சத்திர தினவிழா, மாசிமக விழா, பங்குனி உத்திர விழாக்கள் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் சுவாமி, அம்பாள், முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினங்களில் சுவாமி, அம்பாள், முருகப் பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா காண்பர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, திருப்புகழ் பாடி, நேர்த்திக் கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நேர்த்திக் கடன்
கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்து அக்குறைபாடு நீங்கப் பெறுகின்றனர். சரீர நோய் நீங்க, செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். பதினாறு பேறுகளையும் பெற கார்த்திகை விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
குருவாரத்தில் (வியாழக்கிழமை) விரதம் இருந்து இத்தலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குருதோஷம் நீங்கப் பெற்று, நல்ல ஞானம், கல்வி அறிவு, நீண்ட ஆயுள், குறைவில்லா செல்வம் ஆகியவை கிட்டும் என்பது ஐதீகம். மேலும், திருமண வரம், குழந்தை வரம், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, பதவி உயர்வு ஆகியவற்றுக்கும் இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
தங்கள் பிராரத்தனைகள் நிறைவேறவும், நிறைவேறிய பின்னரும் பக்தர்கள் தேன், பால், நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், தயிர், நெய், பழரசம், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். மேலும், முடி காணிக்கை, காவடி எடுத்தல் நிகழ்வும் நடைபெறுகின்றன. விவசாயிகள் தங்களின் விளைச்சல் தானியங்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர்.