ராமநாதபுரம்: கிடாய் வெட்டி ஊர்மக்கள் ஆதரவுடன் முளைப்பாரித் திருவிழா கொண்டாடிய திருநங்கைகள்


ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கிடாய் வெட்டி அசைவ உணவு பரிமாறி, முளைப்பாரித் திருவிழாவை திருநங்கைகள் ஊர் மக்கள் ஆதரவுடன் கொண்டாடினர்.

ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் கிராமத்தில் திருநங்கைகளால் உருவாக்கப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் 3ம் ஆண்டு முளைப்பாரித் திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடைபெற்ற இத்திருவிழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் கும்மியடித்தும் முளைப்பாரி பாடல்கள் படித்தும் கொண்டாடினர்.

அதனையடுத்து நேற்றிரவு காட்டூரணி கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கரகம் எடுத்து, அழகு குத்தி, தீச்சட்டி எடுத்தும், முளைப்பாளரிகளை தலையில் சுமந்தும் 3 கி.மீ தூரம் ஊர்வலமாக வந்து முத்துமாரியம்மன் கோயிலை வந்தடைந்தனர். அதன் பின் திருநங்கைகள் அனைவரும் ஒன்றாகக் கூடி கோயில் முன்பு முளைப்பாரிகளை வைத்து கும்மி அடித்து கொண்டாடினர்.

இது குறித்து திருநங்கைகள் அமைப்பின் துணைத் தலைவி மும்தாஜ் கூறும்போது, “எங்களை சுற்றியுள்ள மக்கள் நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் அம்மனுக்கு விரதம் இருந்து நாங்கள் இவ்விழாவை கொண்டாடி வருகிறோம். மூன்றாம் ஆண்டு நடைபெறும் இவ்விழா ஊர் மக்கள் ஆதரவுடன் அவர்கள் வழங்கிய அன்பளிப்பாலும் சிறப்பாக நடைபெற்றது.

ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு மதியம் கிடாய் வெட்டி அசைவ விருந்தும் வழங்கப்பட்டது. தினமும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சுற்றுவட்டார மக்கள் திருநங்கைகளாகிய தங்களை குடும்பத்தில் ஒருவராக நினைத்து இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது மகிழ்ச்சி” என்று மும்தாஜ் கூறினார்.

x