காக்கும் கார்த்திகைச் செல்வன் - 17


சண்முகநாதர்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அமைந்துள்ள சண்முகநாதர் கோயில் வள்ளி திருமணம் நடைபெற்ற தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் மூலவர் 10 அடி உயரத்தில் இருப்பது தனிச்சிறப்பு.

திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியில் இருந்து 20 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயில்கள் நிறைந்து காணப்படும் இத்தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டு கால பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

தல வரலாறு

ஒருசமயம் விராலிமலை வனப் பகுதியில் வேடன் ஒருவன் வேங்கைப் புலியை விரட்டிக் கொண்டு வருகிறான். பல இடங்களில் சுற்றித் திரிந்த வேங்கை, ஒரு குரா மரம் அருகே வந்ததும் மாயமாகிவிடுகிறது. வேங்கையைத் தேடி வந்த வேடன் அந்த இடத்துக்கு வந்து பார்த்தபோது, வேங்கையைக் காணவில்லை. அந்த குரா மரம் இருக்கும் இடத்தில் இறைவன் இருப்பதாகக் கருதி வழிபட ஆரம்பித்தான் வேடன். அது இன்றுவரை தொடர்கிறது.

வயலூரில் இருந்த அருணகிரியாரை விராலி மலைக்கு வருமாறு அழைக்கிறார் முருகப் பெருமான். அவர் சொன்ன இடத்தைத் தேடி அலைகிறார் அருணகிரியார். அப்போது வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து விராலிமலை செல்ல அருணகிரியாருக்கு வழி சொல்கிறார். மேலும், அருணகிரியாரை மலை அருகே அழைத்துச் சென்று பின்னர் மறைந்து விடுகிறார். அஷ்டமாசித்தியை (கூடு விட்டு கூடு பாயும் வித்தை) அருணகிரியாருக்கு இத்தலத்தில் முருகப் பெருமான் வழங்கியதால், இத்தலம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அருணகிரியார், தனது திருப்புகழில் இத்தலத்தின் மீது 18 பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் அமைப்பும், சிறப்பும்

விராலிமலை ஊரின் நடுவே இருப்பதால், மலையின் பெயரே ஊருக்கும் ஏற்பட்டுவிட்டது. தேவர்களும் முனிவர்களும் விராலிமலையில் வழிபாடு செய்து வந்ததால் விரவிமலை என்று அழைக்கப்பட்டது. பின்னர் அதுவே மருவி விராலிமலை ஆயிற்று. மலை மீது 207 படிகள் செதுக்கி பக்தர்கள் ஏறிச்செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டது. செல்லும் வழியில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலை உச்சியில் அடர்த்தியான மரங்களுக்கு நடுவே மயில்கள் நிறைந்து காணப்படும்.

கருவறையில் ஆறு முகங்கள், பன்னிரண்டு கைகளுடன், மயில் மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடன் சண்முகநாதர் அருள்பாலிக்கிறார். தீபம் காட்டும்போது பக்தர்களுக்கு மூன்று முகங்கள் மட்டுமே தெரியும். பின்புறம் உள்ள கண்ணாடியில் மூன்று முகங்களைக் காணலாம். மகா மண்டபம் செல்லும் வழியில் கருவறைக்கு எதிரில் நவக்கிரகங்கள் உள்ளன. கோயிலுக்குள் நடராஜர், சிவகாமி, மாணிக்க விநாயகர், உபய நாச்சியாருடன் ஸ்ரீநிவாசப் பெருமாள் அருள்பாலிக்கின்றனர்.

மலை மீதுள்ள தூண்களில் நாரத முனிவர், காஷ்யப முனிவர், அருந்ததி, அருணகிரி நாதர், வசிஷ்டர், ஆறுமுகப் பெருமான் விக்கிரகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மலை அடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. கிழக்குப் பகுதியில் மெய்க்கண்ணுடையாள், மலைக்குச் செல்லும் வழியில் இடும்பன் சந்நிதிகள் உள்ளன.

திருவண்ணாமலைக்கு இணையாக இங்கு பல யோகிகளும், சித்தர்களும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. நாரத முனிவரும், காஷ்யப முனிவரும் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். சிவாச்சாரியார் என்ற முனிவர் வாய் பேச முடியாதவராக இருந்து, இங்கு முருகப் பெருமானை வேண்டியதால், பேசும் திறன் பெற்றதாக அறியப்படுகிறது. அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமானிடம் இருந்து ஞானோபதேசம் பெற்றதை, அவரது திருப்புகழ் பாடல்கள் மூலம் அறியலாம். திருப்புகழ் தொகுப்பில் 58-ம் பாடல், 69 முதல் 83 வரையுள்ள பாடல்கள் விராலிமலையைக் குறிப்பிட்டு பாடப் பெற்றவை ஆகும்.

சரவணப் பொய்கையில் முருகப் பெருமான் தோன்றிய சமயத்தில், வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி, முருகனுக்கு உணவு அளிக்க மறந்து விடுகிறார். இதனால் முனிவர் மனைவியை சபித்து விடுகிறார். இதை அறிந்த முருகப் பெருமான், வசிஷ்ட முனிவருக்கு சாபம் அளிக்கிறார். இத்தலத்துக்கு வந்த வசிஷ்ட முனிவர், முருகப் பெருமானை வேண்டி, தன் சாபம் நீங்கப் பெற்றார்.

திருவாரூர் தட்சிணாமூர்த்தி அடியாருக்கு இறைவனே அப்பம் தந்த தலமாகவும், பிரம்மதேவர் முதன்முதலாக படைத்ததாகக் கூறப்படும் சனகர், சதானந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும், தியானம் செய்த இடத்துக்கே முருகப் பெருமான் வந்து அருள்பாலித்த தலமாகவும் இத்தலம் போற்றப்படுகிறது. இத்தலத்தில் நாக தீர்த்தத்தின் நடுவே நாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சுருட்டு நைவேத்யம்

கருப்பமுத்து என்ற பக்தர், இத்தலத்தில் நிறைய திருப்பணிகளை மேற்கொண்டார். ஒருசமயம் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், இத்தலத்துக்கு அருகே இருந்த மாமுண்டி நதியில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் கருப்பமுத்துவால் நதியைக் கடக்க முடியவில்லை. தனக்கு உதவி புரியுமாறு முருகப் பெருமானை வேண்டினார். குளிரால் நடுங்கினார். சுருட்டைப் பற்றவைத்தார்.

அப்போது ஒருவர் கருப்பமுத்து அருகே நடுங்கியபடி வந்து நின்றார். சுருட்டு வேண்டுமா என்று கேட்டு, அவருக்கு ஒரு சுருட்டை அளித்தார் கருப்பமுத்து. சுருட்டைப் பெற்றுக் கொண்ட அந்த நபர், ஆற்றைக் கடக்க கருப்பமுத்துவுக்கு உதவி புரிந்தார். பின்னர் அந்த நபரைக் காணவில்லை.

நதியைக் கடந்த பின்னர், கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யும்போது, முருகப் பெருமான் அருகே சுருட்டு இருந்ததைக் காண்கிறார் கருப்பமுத்து. ஆற்றைக் கடக்க தனக்கு உதவி புரிந்தவர், முருகப் பெருமான் என்பதை உணர்ந்த கருப்பமுத்து, அதுகுறித்து அக்கம் பக்கத்தாரிடம் தெரிவித்தார். அன்று முதல் முருகப் பெருமானுக்கு மாலை வேளை பூஜையின்போது சுருட்டு நைவேத்யம் செய்யப்படும் பழக்கம் ஏற்பட்டது.

அதன் பிறகு புதுக்கோட்டை மகாராஜா சுருட்டு நைவேத்யத்துக்கு தடை விதித்தார். அன்றிரவு அவரது கனவில் முருகப் பெருமான் தோன்றி, “எனக்கு சுருட்டு படைப்பது, புகைப் பழக்கத்துக்கு முக்கியத்துவம் தருவதற்கு அல்ல. மற்றவருக்கு உதவி செய்யும் குணத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காவே இப்பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. குளிரால் துன்பப்படும் ஒருவருக்கு உதவி செய்ய என் பக்தர் நினைத்தார். அவரது அன்புக்காகவே நான் அதை ஏற்றுக் கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்ய வேண்டாம்” என்று அருளினார்.

அதனால் இன்றும் இப்பழக்கம் தொடர்கிறது. இந்த சுருட்டை பக்தர்கள் பிரசாதமாக பெற்றுச் சென்று வீட்டில் வைக்கின்றனர். இறைவனுக்கு என்ன படைக்கிறோம் என்பது முக்கியமல்ல. பக்தியும் அன்புமே முக்கியம் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

வளைந்த தம்புரா நாதர்

பிரம்மதேவரின் ஆணவத்தை அடக்கும்பொருட்டு, அவரது 5 தலைகளில் ஒன்றை, சிவபெருமான் கொய்தார். அப்போது நாரத முனிவர், தனது தந்தை (பிரம்மதேவர்) எந்தத் தவறும் செய்ய வில்லை என்று சிவபெருமானிடம் வாதிடுகிறார். இதனால் சிவநிந்தனைக்கு ஆளானார். அவரது தம்புராவும் வளைந்தது.

இதைத் தொடர்ந்து இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார் நாரதர். இதன் அடிப்படையில் இங்கு நாரதர் உற்சவராக உள்ளார். இன்றும் இவரது தம்புரா வளைந்தபடியே உள்ளது. கோயில் திருவிழாவின்போது முருகப் பெருமான் முன்பாக இவரும் உலா செல்வது தனிச்சிறப்பு.

நேர்த்திக் கடன்

இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முடி இறக்கி காது குத்துதல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகிறார்கள். சஷ்டி விரதம் இருத்தல், கார்த்திகை விரதம் இருத்தல், அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களையும் செலுத்தி சுவாமி தரிசனம் செய்வதும் இங்கு வழக்கம். இங்கு சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவையும் நடைபெறும்.

‘விராலி மலை முருகனுக்கு வள்ளிமயில் காவடி, வினைகள் எல்லாம் தீர்த்து வைக்கும் வேலவனின் காவடி, இன்பம் தரும் காவடி இன்னல் தீர்க்கும் காவடி, ஈஸ்வரன் மைந்தனின் இணையில்லாக் காவடி’ என்று கூறி பக்தர்கள் காவடி எடுப்பர். இத்தலத்தில் முருகனை வழிபட்டால் மன அமைதி, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

குழந்தை பிறந்தவுடன், குழந்தையை முருகப் பெருமானிடம் ஒப்படைத்துவிட்டு குழந்தையின் உறவினர்கள் அல்லது மாமன்மார்கள், குழந்தைக்குப் பதிலாக தவிட்டைத் தந்து, சுவாமியிடம் இருந்து குழந்தையைப் பெற்றுச் செல்வதும் ஒருவித நேர்த்திக்கடன். அப்படிக் கொடுத்துவிட்டால் அன்று முதல் அது முருகனின் குழந்தை என்பது ஐதீகம். அந்தக் குழந்தைக்கு திருமண வயது வரும் போது மீண்டும் முருகன் சந்நிதிக்கு வந்து உரிய காணிக்கை செலுத்தி அந்தக் குழந்தையை மீண்டும் தங்கள் பிள்ளையாக வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள்.

திருவிழாக்கள்

வைகாசி விசாகத் திருவிழா (10 நாள்), தைப்பூசத் திருவிழா (10 நாள்), ஐப்பசி கந்த சஷ்டித் திருவிழா (6 நாள்) சிறப்பாக கொண்டாடப்படும். அருணகிரிநாதருக்கும் இசை விழா கொண்டாடப்படுகிறது. முருகனுக்கு உகந்த கிருத்திகை, சஷ்டி, விசாக நட்சத்திர தினங்கள், தீபாவளி, பொங்கல், வருடப் பிறப்பு தினங்களில் கந்தனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

x