ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா: நடை சாத்தல் நேரங்கள் அறிவிப்பு


ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு கோயில் நடை சாத்தல் நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா ஜுலை 29 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 14 வரையிலும், மொத்தம் 17 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆடித் திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு கோயில் நடை சாத்தல் நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதசுவாமி கோயிலின் இணை ஆணையர் செ.சிவராம்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு; ’ஆகஸ்ட் 4 ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4.00 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். இரவு 8.00 மணிக்கு வெள்ளி ரதத்தில் அலங்காரத்துடன் அம்பாள் வீதி உலா நடைபெறும்.’

நடைசாத்தல்:
ஆகஸ்ட் 8 ஆடி தபசு அன்று அதிகாலை 2.00 மணியளவில் நடை திறந்து காலை 2.30 மணி முதல் 3.00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். அதன்பின்னர் பூஜா காலங்கள் காலசந்தி பூஜை வரை நடைபெறும். காலை 5.55 மணிக்கு மேல் அம்பாள் கமல வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். நடை திறந்தவுடன் பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படும்

ஆகஸ்ட் 12 மஞ்சள் நீராடலை முன்னிட்டு மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை கோயில் நடை சாத்தப்படும். ஆகஸ்ட் 14 அன்று கெந்தமாதன பர்வதம் மண்டகப்படி எழுந்தருளலை முன்னிட்டு கோயில் நடை காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை சாத்தப்படும்.’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x