மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 10


மகா பெரியவா

கடவுள் நம்பிக்கை கொண்ட, இந்து மத சம்பிரதாயங்களைப் பின்பற்றுகிறவர்களுக்கு கர்மாக்கள் என்பவை முக்கியம். ‘கர்மா’ என்ற வார்த்தைக்குப் பல பொருட்கள் இருந்தாலும், இரண்டு அர்த்தங்களில் இந்த வார்த்தை அதிகம் பிரயோகப்படுத்தப்படுகிறது.

ஒன்று, ‘எல்லாம் அவனவன் கர்மா’ என்போம். அதாவது, விதி. முந்தைய ஜன்மத்தின் பலாபலன்கள். இதில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு.

இன்னொன்று, மனிதர்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டிய காரியங்கள். திருமணம் முதலான பலவும் மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய கர்மாக்கள் என்று வலியுறுத்தப்படுகிறது.

மனிதன் பிறந்ததில் இருந்து இறக்கின்ற வரை என்னென்ன கர்மாக்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றனவோ, அவை அனைத்தையும் செய்ய வேண்டியது அவசியம். குழந்தை பிறந்தவுடன் பெயர் வைப்பதில் (நாமகரணம்) துவங்கி, உபநயனம், திருமணம், குழந்தை பெற்றுக்கொண்டு குடும்பஸ்தர் ஆவது என்று இறக்கின்ற வரை கர்மாக்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இத்தனை புனிதமான கர்மாக்களில் திருமணம் என்பது முக்கியமான ஒன்று.

வழிபாடு தொடர்பான ஒரு ஹோமத்தையோ, இதர தெய்வ காரியங்களையோ தம்பதி சமேதராகச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. எனவே, திருமணம் என்பது வாழ்க்கையில் மிகவும் அவசியம்.

சைவ நால்வர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தர் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று தந்தையாரான சிவபாத இருதயரிடம் பிரார்த்திக்கிறார். ஆனால், தந்தையோ, ‘‘நீ செய்து வரும் பக்தி வழிபாட்டினால் உனக்கு முழு பலன் வேண்டுமானால், நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்’’ என்று சாஸ்திரங்களைக் குறிப்பிட்டு வலியுறுத்துவார்.

ஆக, திருமணம் என்பது வாழ்க்கையில் முக்கியமான, அவசியமான கர்மா.

திருமணம் என்பது முன்காலத்தில், முழுக்க முழுக்க வைதீகச் சடங்குகள் நிறைந்த ஒரு நிகழ்வாக இருந்தது. ஆனால், இன்றைக்குத் திருமணம் என்பது எப்படிப் பார்க்கப்படு கிறது? தங்களது பொருளாதார வசதியைப் பிறருக்குத் தெரிவிப்பதற்காக நடத்துகிற ஒரு படாடோபத் திருவிழா.

திருமணங்களில் வைதீகம் தொடர்பான சடங்குகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவத் தைத் தர வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. இன்றைக்கு ரொம்ப வசதியாக வைதீக காரியங்களை எல்லாம் மறந்துவிட்டு (அல்லது குறைத்து விட்டு), பிற கேளிக்கை சமாசாரங்களுக்கு, ஆட்டம் பாட்டத்துக்கு, விதவிதமான உணவு வகைகளுக்கு என்று முக்கியத்துவம் கொடுத்து, திருமண நிகழ்வின் காரண காரியத்தையே மாற்றி விட்டோம். இது காலத்தின் கோலமா? காலத்தின் கட்டாயமா? எப்படிச் சொல்வதென்று புரியாமல் தவிக்கிறோம்.

திருமணம் போன்ற நிகழ்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும், கலந்து கொள்கிறவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மகா பெரியவா நிறைய கருத்துகளைச் சொல்லி இருக்கிறார். அவற்றுள் சில கருத்துகளை அவரது திருவாக்கிலேயே பார்க்கலாம்.

‘‘இப்போது நடக்கும் கல்யாணங்களில் வைதீகம் தொடர்பானவற்றுக்குப் போதிய அவகாசம் கொடுப்பதில்லை. வைதீகம் தொடர்பான சடங்குகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்று அதற்கு உண்டான முயற்சிகளில் இறங்குவதும் இல்லை.

ஆனால், அதே நேரம் யார் பேண்ட் கச்சேரி வைக்கலாம், யாருடைய டான்ஸ் வைக்கலாம், ஊர்வலத்தை எப்படி ஆடம்பரமாக நடத்தலாம் என்று யோசித்து அதற்குண்டான ஏற்பாடுகளைச் செய்வதற்கே சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரம் போத மாட்டேன் என்கிறது.

எது இத்தனைக்கும் உயிர் நிலையோ, எதை வைத்துக் கல்யாணமோ,அவற்றைப் பற்றி.. அதாவது வேத மந்திரங்கள் பற்றியோ, வேதம் சொல்லும் பண்டிதர்களைப் பற்றியோ கவலைப் படுபவர்கள் இல்லை. திருமணத்துக்கு உண்டான மந்திரங்களையும், அவற்றைச் சொல்லி நடத்தி வைக்கும் வைதீகர்களையும் கடைசி பட்சமாக வைத்திருக்கிறோம். போதிய முக்கியத்துவத்தை யும் நேரத்தையும் இவற்றுக்குக் கொடுப்பதில்லை.

யாருக்காவது சிரத்தை ஏற்பட்டு, அவகாசமும் கிடைத்து, தான் செய்ய வேண்டிய கர்மாக்களின் மந்திர அர்த்தங்களைத் தெரிந்துகொள்ள ஒருவேளை பிரியப்பட்டால், அதைச் சொல்லி விளக்குவதற்கு வைதீகர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அந்தச் சிரத்தையும் அவகாசமும் கர்மாவைச் செய்கிற கர்த்தாவுக்கு (நிகழ்வின் கதாநாயகன். திருமணம் என்றால் மாப்பிள்ளை) இருக்க வேண்டுமே!

கல்யாணம், உபநயனம் என்று ஒரு கர்மாவின் பெயரைச்சொல்லி விமரிசையாகப் பத்திரிகை அடிக்கிறோம். சொந்தக்காரர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் ஊர் முழுக்கப் பத்திரிகையை அனுப்பி வைத்து,அவர்களை மண்டபத்துக்கு வரவழைக்கிறோம்.

வந்தவர்களை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கில் (இது மகா பெரியவா அப்போது சொன்னது... இப்போது படிக்கிறவர்கள் லட்சக்கணக்கில் என்று திருத்தி வாசிக்கவும்) செலவும் செய்கிறோம். ஆனால், எந்தக் கர்மாவுக்காக இத்தனை பேரைக் கூட்டினோமோ, அந்தக் கர்மாவை சிரத்தையாக அனுஷ்டிப்பதில் உரிய கவனத்தைச் செலுத்துவதில்லை.

அதன் அர்த்தம் என்ன, தாத்பர்யம் என்ன, இதை ஏன் செய்கிறோம் என்பனவற்றைப் பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள முயலுவதில்லை. எதையும் அதன் அர்த்தம் தெரிந்து செய்தால்தான் பலன் அதிகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கர்மாவை விட்டுவிடக் கூடாது என்கிற பயமும் இருக்கிறது. அதை அப்படியே விட்டு விடுகிற துணிச்சலும் மனிதர்களுக்கு வரவில்லை. அப்படிக் கர்மாவை விடாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்கள், அதன் அர்த்தத்துக்கான முக்கியத்துவத்தையும் கொடுக்கத்தான் வேண்டும்.

‘கர்மாவை செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால் தவறு’ என்று ஏதோ ஒரு பயம் இருப்பதால்தானே, இன்னமும் விடாமல் செய்து வருகிறோம்?! அதே மாதிரி இது போன்ற கர்மாக்களில் சொல்லப்படுகிற மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியாமல் செய்தாலும் தவறு என்ற பயம் ஏற்பட்டு, உரிய பண்டிதர் மூலமாக அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கர்மாவைச் செய்கிறவர்கள், அது திருமணமோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அர்த்தம் தெரிந்துசெய்தாலே அதன் பலன் அதிகரிக்கிறது. சம்பந்தப்பட் டவர் பெறுகிற ஆனந்தமும் அதிகமாகிறது. சாந்தோக்ய உபநிஷதத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது.

சரி... இதை எல்லாம் தெரிந்துகொள்கிற கர்த்தா வான ஒருவன்தான் உரிய மந்திரங்களை வேத பண்டி தர்கள் சொல்லக் கேட்டுக் கல்யாணம் பண்ணிக்கொள் கிறான்... அல்லது உபநயனம் செய்து கொள்கிறான். நிச்சயம் அவனுக்கு நற்பலன் வந்து சேரப் போகிறது.

ஆனால், இந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களாக வந்திருக்கிற உறவுக்காரர்கள், நண்பர்கள் போன்றோர் அந்த நேரத்தில் என்ன செய்கிறார்கள்? அவர்களது கவனம் மேடையில் சொல்லப்படுகிற மந்திரங்களை செவி மடுப் பதிலும், வேத கார்யங்களைக் கவனிப்பதிலுமா இருக்கிறது? இல்லையே! என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள்?

விருந்து நடக்கிற பக்கம் ஓடிவிடுகிறார்கள் சிலர். பேச்சுக் கச்சேரி,டான்ஸ் கச்சேரி, மேளக் கச்சேரி என்று மேலும் சிலர் மும்முரம் ஆகிவிடுகிறார்கள். கல்யாணத்துக்கு வந்துவிட்டு, இவற்றிலேயே சந்தோஷமாக இருந்துவிடுகிறார்கள். இது கூடாது.

உயர்ந்த மரியாதைக்குரிய வேத மந்திரங்கள் சொல்லப் படும்போது வந்திருக்கிறவர்கள் அனைவரும் அதைக் கவனித்து, அந்த மந்திரங்களுக்கும், வேத பண்டிதர் களுக்கும் ஒரு கவுரவத்தைத் தர வேண்டும். அப்படி நடந்துகொண்டால், மந்திரங்களை உட்கார்ந்த இடத்தில் இருந்து கேட்ட மற்றவர்களுக்கும் புண்ணிய பலன் தேடித் தரும். வைபவத்துக்கு வந்திருக்கிற மற்றவர்களும் வேத மந்திரங்களின் அர்த்தம் தெரிந்துகொண்டு அவற்றைக் கேட்டால், கேட்ட ஒரே காரணத்தினால் புண்ணியம் ஏற்படும்.

என்னது... வேத மந்திரத்தைக் கேட்டு சடங்குகளைச் செய்கிற கர்த்தாவுக்கும் பலன்; இவற்றைக் கேட்கிற மற்றவர்களுக்கும் பலன்... அப்படியென்றால், கர்த்தாவுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தோன்றுகிறதா?

கர்த்தாவுக்கு விசேஷமான பலன், அதாவது மற்றவர் களுக்குக் கிடைக்கின்ற பலனைவிடக் கூடுதலாகக் கிடைக்கும் என்று வேண்டுமானால் சொல்லலாம். இது போன்ற வைபவங்களில் கலந்துகொள்கிற மற்றவர்களும் கர்த்தாவுக்குக் கிடைக்கின்றதைப் போலவே கூடுதலான பலனை, சமமான பலனைப் பெறுவதற்கு ஒரு வழியும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு ராஜா அஸ்வமேத யாகம் பண்ணுகிறான் என்றால், மற்றவர்கள் அப்படிச் செய்ய முடியாவிட்டாலும், எப்படி இந்த யாகத்தைச் செய்வது என்ற வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளலாம் அல்லவா?அப்போது சொல்லப்படும் மந்திரங்களைத் தாங்களும் கவனிக்கலாம் அல்லவா? அதன் அர்த்தத்தையும் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

இப்படிச் செய்து விட்டாலே மற்றவர்களுக்கும் யாகம் செய்த பூர்ண பலன் உண்டாகி விடுகிறதாம். இப்படி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதே ரீதியில் கல்யாணம் ஆகட்டும்... அல்லது மற்ற நல்ல நிகழ்வுகள் ஆகட்டும்... எதில் கலந்து கொள்கிறவர்களும் சிரத்தையோடும் ஆர்வத்தோடும் மந்திரங்களைக் கவனித்து வந்தாலே, அவர்களுக்கும் மகத்தான புண்ணியம் கிடைக்கும்.’’

இப்படி விளக்கமாக அதே நேரம் எளிமையாகச் சொல்லிகர்மானுஷ்டானங்களை அனைவரும் அனுசரிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறார் காஞ்சி மாமுனிவர்.

மகா பெரியவாளின் அத்யந்த பக்தர் வாழ்வில் நடந்த சுவையான அனுபவம் ஒன்றை அடுத்த வாரம் பார்ப்போம்!

(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 09

x