பழநி, திருப்பரங்குன்றம், திருத்தணி முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜைகள்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்


பழநி முருகன் கோயிலுக்கு ரத காவடி எடுத்து வந்த பக்தர்கள்.

பழநி / திருப்பரங்குன்றம் / திருத்தணி: ஆடி கிருத்திகையையொட்டி பழநிதண்டாயுதபாணி சுவாமி கோயிலில்நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. பின்னர் விஸ்வரூபதரிசனம், விளா பூஜை நடந்தது.

வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்தும், அலகுகுத்தியும் வேண்டுதலை நிறைவேற்றினர்.

மலைக்கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில்3 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தார்.முன்னதாக, நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இரவில் பக்தர்கள் வெள்ளத்தில், ‘அரோகரா’ என முழங்க தங்கரதப் புறப்பாடு நடைபெற்றது.

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை உற்சவர் முருகன்,தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் புறப்பாடாகி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார்.

பின்னர் முக்கிய வீதிகள் வழியேஉலா வந்து ஆடிக் கார்த்திகைமண்டபத்தில் எழுந்தருளினார். அதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பன்னீர் காவடி இளநீர் காவடி, புஷ்பக் காவடிகள் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

மாலையில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். விழாஏற்பாடுகளை கோயில் துணைஆணையர் நா.சுரேஷ், அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

திருத்தணி: திருத்தணி சுப்பிரமணிய சுவாமிகோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு நேற்று அதிகாலையில் மூலவருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தங்கவேல், தங்க கிரீடம், பச்சை மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி தேவஸ்தான செயல்அதிகாரி சியாமளா ராவ், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் சுவாமிதரிசனம் செய்தனர். இரவு 7.15மணியளவில் சரவணப் பொய்கையில் 3 நாள் தெப்பத் திருவிழா தொடங்கியது. இதில், உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன், வண்ண மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, 3 முறை குளத்தைச் சுற்றி வலம் வந்து, அருள்பாலித்தார். இந்த தெப்பத் திருவிழாவில் அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

x