ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேருக்கு புதிய வடம் மாற்றம்


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேருக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பில் 700 அடி நீளத்திற்கு புதிய வடம் இன்று தேரில் பொருத்தப்பட்டது.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர் 9 நிலைகள், 112 அடி உயரம் மற்றும் 1,500 டன் எடை உடையதாகும். ஆடிப்பூர தேர் திருவாரூர் தேருக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேராகும்.இந்த தேர் நாங்குநேரி வானமாமலை ராமானுஜ ஜீயரால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. தேரில் ராமாயணம் மற்றும் மகாபாரத காட்சிகள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூர தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டம் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் திருவிழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டாள் கோயில் தேர் வடங்களை ஆய்வு செய்தபோது இருவடம் நூல் பிரிந்து சேதமடைந்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் 700 அடி நீளத்திற்கு புதிய வடம் வாங்கப்பட்டது. இந்த புதிய வடம் தலா 350 அடி நீளத்தில் இரு வடங்களாக திங்கள் கிழமை தேரில் இணைக்கப்பட்டது. கடந்த மாதம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நடந்த ஆனி பெருந்திருவிழா தேரோட்டத்தின் போது தேரின் வடம் அறுந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆண்டாள் கோயில் தேரின் வடங்கள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x