ஆடிக் கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!


திருவள்ளூர்: ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா கடந்த 27-ம் தேதி முதல் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

பால், தயிர், இளநீர் இவற்றுடன் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலமும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சுவாமிக்கு தங்கக் கவசம், வைரக் கிரீடம், பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

ஆடிக் கிருத்திகை திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். விழாவை முன்னிட்டு திருவள்ளூர் எஸ்பி-யான சீனிவாச பெருமாள் தலைமையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

x