காக்கும் கார்த்திகைச் செல்வன் - 13


சென்னிமலை முருகன்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பலவித அதிசயங்களைக் கொண்டு தனிச்சிறப்புடன் விளங்குகிறது. இத்தல முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்த தயிர் புளிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடையில், கோயிலுக்குத் தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்புள்ள மாமாங்கத் தீர்த்தம் திடீரென பொங்கி வழிந்தோடும் சம்பவமானது இங்கே இன்றைக்கும் நிகழும் அதிசய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

ஈரோடு - பெருந்துறை சாலையில் 30 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மலைப்படி வழியில் நீண்ட இலைகளுடன் கூடிய துவட்டி மரம், பல்லாண்டு காலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு

ஒருசமயம் நொய்யல் ஆற்றுக்கு அருகில் வசித்து வந்த முதியவர் ஒருவர், பசு ஒன்றை வளர்த்து வந்தார். தினந்தோறும் இப்பசு, யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்து வந்தது. இதை கவனித்த முதியவர், ஒருநாள் பசுவைப் பின் தொடர்ந்து சென்றார். பசு பால் சொரிந்த இடத்துக்குச் சென்று தோண்டிப் பார்த்தால் அங்கு முருகப் பெருமானின் சிலை காணப்பட்டது.

அச்சிலை இடுப்பு வரை அழகிய வேலைப்பாடுகளுடனும், இடுப்புக் கீழ் பாதம் வரை கரடுமுரடாகவும் இருந்தது. கரடுமுரடான பகுதியை உளி கொண்டு, முதியவர் செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக, அப்பகுதியில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த சரவண முனிவரிடம் முறையிட்டனர். முனிவரும் முருகப் பெருமான் அப்படியே இருக்கட்டும் என்று ஆலோசனை வழங்கினார். அதன்படி, முருகப் பெருமான் சிலையை சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து அப்பகுதி மக்கள் வழிபடத் தொடங்கினர்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கு யுத்தம் ஏற்பட்டபோது, ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னிமலை என்று கூறப்படுகிறது. சென்னிமலை முருகப் பெருமான் தண்டாயுதபாணி என்றும் அழைக்கப்படுகிறார். இது அருணகிரியாருக்கு படிக்காசு வழங்கப்பட்ட தலம் என்பது தனிச்சிறப்பு. வள்ளி, தெய்வானை இத்தல முருகப் பெருமானை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி ஆகிய பெயர்களுடன் இங்கு தவம் மேற்கொண்டுள்ளனர்.

இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழிகாட்டிய தலம் என்பதாலும், அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள சுப்பிரமணியர்) வேறு எங்கும் இல்லை என்பதாலும் இத்தலம் கூடுதல் சிறப்பைப் பெறுகிறது. கோயிலுக்குப் பின்புறம் பிண்ணாக்கு சித்தர் குகை உள்ளது. வேங்கை மரத் தேர் இருப்பது இத்தலத்தில் மட்டுமே.

சென்னிமலை பிள்ளைத் தமிழ், சென்னியாண்டவர் காதல், சென்னிமலை யாக அந்தாதி, மேழி விளக்கம், சென்னிமலை தல புராணம், அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல்கள் மூலம் சென்னிமலையின் பெருமையும், முருகப் பெருமானின் சிறப்புகளும் அறியப்படுகின்றன.

கந்த சஷ்டி கவச அரங்கேற்றம்

கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட தலம் என்பதால் எப்போதும் இங்கு பக்தர்கள் கூட்டம் இருக்கும். முருகப் பெருமான் நடுநாயக மூர்த்தியாகவும், செவ்வாய் கிரகமாகவும் அமைந்துள்ளார். அவரைச் சுற்றி 8 நவக்கிரகங்கள் உள்ளன. முருகப் பெருமானை வழிபட்டாலே நவக்கிரகங்களை வழிபட்ட பலன் உண்டு என்பது ஐதீகம்.

கந்தர் சஷ்டி கவசம் இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள் காங்கேயம் அருகே உள்ள மடவிளாகத்தைச் சேர்ந்தவர். மைசூர் தேவராச உடையாருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். முருக பக்தரான இவர், ஐப்பசி மாதம், கந்த சஷ்டி தினத்தில் வேற்றுமதத்தவர்களிடம் அனல்வாதம், புனல்வாதம் செய்து கந்தர் சஷ்டி கவசத்தை அரங்கேற்ற எண்ணினார். அதற்கு உரிய தலமாக சென்னிமலையைத் தேர்ந்தெடுத்தார். முருகப் பெருமானின் அருளாணைப்படி ‘சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக’ என்று அவரை அழைத்து, கந்தர் சஷ்டி கவசம் அரங்கேறியது.

(அனல்வாதம் - தான் எழுதிய நூலை சான்றோர் முன் நெருப்பில் இட்டு, தீயில் கருகாமல் மீண்டும் எடுத்து அரங்கேற்றுவது, புனல்வாதம் - கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில், தான் எழுதிய நூலை இட்டு, நீரில் எதிர்கொண்டு செல்லும் சுவடிகளை எடுத்து அரங்கேற்றம் செய்வதாகும்)

‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வளரும்’ என்பதற்கு ஏற்ப சந்தான பாக்கியம் வேண்டி பக்தர்கள் ஒவ்வொரு மாத வளர்பிறை சஷ்டி தினத்திலும், ஐப்பசி மாத கந்தர் சஷ்டி திருவிழா ஆறாம் நாளிலும் விரதம் இருந்து சென்னிமலை முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம். புதிதாக திருமணம் ஆனவர்கள் குழந்தைப் பேறு வேண்டி, பச்சரிசி மாவிடித்து, தீபம் ஏற்றி வழிபடுவது, சந்நிதி முன்னர் தாலிச் சரடு கட்டிக் கொள்வது இன்றும் நடைபெறுகிறது.

மலையேறி வந்த மாட்டுவண்டி...

மாட்டு வண்டி மலை ஏறிய அதிசயம்!

சென்னிமலை மலைக் கோயிலின் உயரம் 1,740 அடி ஆகும். இதில், 1,320 படிகள் ஏறி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். வாகனங்கள் செல்ல சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு, தேவஸ்தான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் தங்கள் வாகனங்களிலும் சென்று வரலாம். இந்நிலையில், 1984-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி இரட்டை மாட்டு வண்டி இப்படிகள் வழியாக மலையேறிய சம்பவம் நடைபெற்றது. இதைக் காண்பதற்காக, முதல் நாள் இரவு முதலே பக்தர்கள் குவிந்தனர். இச்சம்பவம் முருகப் பெருமானின் திருவிளையாடலாக இன்றும் போற்றப்படுகிறது.

செவ்வாய் பரிகார ஸ்தலம்

வைத்தீஸ்வரன் கோவில் போலவே இத்தலமும் செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், சென்னிமலை முருகப் பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். பொதுவாக சூரசம்ஹார நிகழ்வை ‘சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சம்ஹாரம்’ என்று கூறுவது வழக்கம். நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் சூரசம்ஹாரத்துக்கு முன்பு பார்வதி தேவியிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின்னர் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும். இதனால் சஷ்டி தினத்தில் சிக்கல், திருச்செந்தூரில் பக்தர்கள் கூடி சுவாமி தரிசனம் செய்வர். குரு ஸ்தலமாகக் கருதப்படும் திருச்செந்தூரில் குருவுக்கு பரிகாரம் செய்வது போல, கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட சென்னிமலைக்கு வந்து வேண்டிக் கொண்டால் செவ்வாய் தோஷம் முதலான தோஷங்கள் நீங்கப்பெறலாம் என்பது நம்பிக்கை.

சஞ்சீவி மூலிகைகள்

நோய் தீர்க்கும் வல்லமை கொண்ட மூலிகைகள், சென்னிமலையில் நிறைந்து காணப்படுகின்றன. வெண்சாரை, வெண்தவளை, கெயாத எட்டி, கரநொச்சி, கானாச்சுனை உள்ளிட்ட மூலிகைகள் இங்கு உள்ளன. உடற்பிணி நீங்குவதற்காக, சோழ அரசர் சிவாலயச் சோழன், பல தலங்கள் சென்று வழிபாடு நடத்தினார். நிறைவாக சென்னிமலை முருகப் பெருமானை வணங்கிய பிறகு நோய் நீங்கப் பெற்றதால், அவர் இந்த மலைக் கோயிலை அமைத்ததாக கூறப்படுகிறது.

புண்ணாக்கு சித்தர்

தன்னாச்சி அப்பன் சித்தர் ஒவ்வொரு தலத்துக்கும் வான்வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்த பின்னர், சென்னிமலை வந்தடைந்தார். “இறைவன் அருளை மறுத்து உரைப்பவர்கள், உண்மைக்கு புறம்பாகப் பேசுபவர்களின் நாக்கு புண் பொருந்திய நாக்கு என்று அடிக்கடி கூறுவார் தன்னாச்சி அப்பன். 18 சித்தர்களில் ஒருவரான இவர் முனிவர் என்றும், ‘புண் நாக்கு சித்தர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிற்காலத்தில் ‘புண்ணாக்குச் சித்தர்’ என்று அழைக்கப்பட்டார்.

இவர் தனது நாக்கை பின்புறமாக மடித்து அருள்வாக்கு சொல்லி வந்ததால் ‘பின்நாக்கு சித்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். சித்தராக வான்வழியாக பறந்து இத்தலத்துக்கு வந்த இவர், இங்கேயே தங்கி சுப்பிரமணியரை நினைத்து தவம் புரிந்து இங்கேயே சிவசமாதி அடைந்தார். சென்னிமலையில் 1,740 அடி உயரத்தில் குகை வடிவத்தில் உள்ள கோயிலில் வள்ளி, தெய்வானை சந்நிதிக்கு மேல் கிழக்கு முகமாக புண்ணாக்குச் சித்தர் அருள்பாலிக்கிறார்.

20 தீர்த்தங்கள்

சென்னிமலை கோயிலில் 20 தீர்த்தங்கள் உள்ளன. இந்திர தீர்த்தம், அக்னி, இமயன், காசிபர், பட்சி, நிரு, சிவகங்கை, மாமாங்கம், வரடி, காளி, தேவி, செங்கழுநீர், வாலி விஷ்ணு, நெடுமால் சுனை, தேவர்பாழி, நவவீர, பிரம்ம, சாரதா, மார்க்கண்டேய தீர்த்தம், தெப்பக்குளம் முதலான தீர்த்தங்கள் உள்ளன. மேலும், சென்னிமலை முருகப் பெருமானின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய பிரசாதங்களுக்காக மலை அடிவாரத்தில் இருக்கும் திருமஞ்சன தீர்த்தத்தில் இருந்து நீர் கொண்டு வரப்படுகிறது.

திருவிழாக்கள்

சித்திரை முதல் பங்குனி முடிய இங்கு எப்போதும் திருவிழா நடைபெறும். தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது நடைபெறும் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாம் தரிசனம் செய்வது வழக்கம். அமாவாசை, சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

குழந்தை வரம் வேண்டி பலர் சஷ்டி விரதம் இருந்து இத்தலத்தில் வழிபாடு செய்வதுண்டு. திருமணம், விவசாயம், கிணறு வெட்டுதல், புதிய தொழில் தொடங்குவது உள்ளிட்டவை தொடர்பாக, முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்தரவு கேட்டு அதன்படி செயல்படும் வழக்கம் இன்றைக்கும் இங்கே இருக்கிறது

காவடி எடுத்தல், முடி காணிக்கை, முடி இறக்கி காது குத்துதல், கிருத்திகை விரதம் இருத்தல், சஷ்டி விரதம் இருத்தல், சண்முகார்ச்சனை, முருக வேள்வி உள்ளிட்டவற்றை செய்து பக்தர்கள் முருகனுக்கு இங்கே தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

x