வராஹருக்கு திருமஞ்சனம் செய்தால் வாழ்வெல்லாம் வளமே!


வராஹ மூர்த்தி

வராக மூர்த்தியை வணங்கி வழிபட்டால், நம் சாபமெல்லாம் போக்கியருளுவார் வராகர். பூமி மனை வீடு யோகம் தந்தருளுவார் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

மகாவிஷ்ணுவின் திரு அவதாரங்களில் வராக அவதாரமும் ஒன்று. இரண்யாட்சகன் எனும் அரக்கன் நாட்டை அட்டூழியம் செய்துகொண்டிருந்தான். பூலோகத்தைத் தாங்கி நிற்கும் பூமித் தாயாகிய பூமாதேவியை கடலுக்கடியில் சென்று மறைத்து வைத்தான். அவனுடைய அட்டூழியங்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தன.

இயற்கையின் அற்புதத்தையெல்லாம் தாங்கிக் கொண்டிருப்பவள் பூமித்தாய். உயிரினங்கள் எனும் அற்புதமான படைப்புகளைக் கண்டு மகிழ்ந்து நமமையெல்லாம் அரவணைத்துக் காப்பவள் பூமித்தாய். நம்முடைய அர்த்தமுள்ள வாழ்க்கையின் பயனை அடைவதற்கு வரம் தந்து அருளுபவள் பூமித்தாய்.

கருணையே கடலெனக் கொண்டிருக்கும் பூமாதேவியை மகா அசுரன், கடலுக்கடியில் சென்று மறைத்துவிட, படைக்கும் தொழிலை செய்கின்ற பிரம்மாவும் தேவர்பெருமக்களும் முனிவர் பெருமக்களும் சென்று மகாவிஷ்ணுவிடம் பூமாதேவியை மீட்டு வழங்கி, பூமாதேவியைக் காப்பாற்றுங்கள். இந்த பூமியைக் காப்பாற்றுங்கள் என வேண்டினார்கள். அப்போதுதான், வராஹ அவதாரமெடுத்தார் மகாவிஷ்ணு.

’எவராலும் தமக்கு அழிவு கிடையாது. எந்த ஆயுதத்தாலும் தம்மை அழிக்க முடியாது’ என்ற வரத்தைப் பெற்ற இரண்யாட்சகனை அழிப்பதற்காக பன்றி முகம் கொண்ட வராஹ ரூபமாகத் தோன்றி அவனை அழித்தொழித்தார் மகாவிஷ்ணு. வராஹம் என்றால் பன்றி என்று பொருள்.

பூமித்தாயைக் காப்பாற்றினார். பூலோகத்தை மீட்டெடுத்தார். மகாவிஷ்ணு எடுத்த அற்புத அவதாரமான வராஹ மூர்த்தியின் அனுக்கிரகத்தை நாம் பெற்றுவிட்டால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும்.

ஸ்ரீவராஹ மூர்த்தியை வழிபடுவது மிகுந்த வல்லமைகளைத் தந்தருளக்கூடியது. மகா விஷ்ணுவின் அருளை அனவரதமும் பெற்று ஆனந்தமாக வாழலாம் என்கிறார்கள் வைணவப் பெரியோர்.

வராஹ மூர்த்தியை வணங்கினால், திருமாலின் அருள் மட்டுமின்றி, பூமித்தாயான மகாலட்சுமியின் அனுக்கிரகமும் கிடைக்கப்பெறலாம். நாம் நினைத்து வேண்டுகிற காரியங்கள் அனைத்தும் வீரியமாகும். வெற்றியைத் தந்தருளுவார் ஸ்ரீவராஹ பெருமாள்.

தொடர்ந்து வராஹ மூர்த்தியை வழிபட்டு வந்தால், வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கப்பெறலாம். நம் கிரக தோஷங்களால் உண்டான தடைகள் நீங்கும். பூமி யோகம் கிடைத்து ஐஸ்வர்ய கடாட்சத்துடன் இனிதே வாழச் செய்வார்கள் ஸ்ரீலக்ஷ்மியும் ஸ்ரீவராஹரும்!

வராஹருக்கு திருமஞ்சனம் சார்த்துவதாக வேண்டிக்கொண்டு, தினமும் வராஹரை மனதால் வேண்டிக் கொண்டு வந்தால், பூர்விகச் சொத்துகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்தருளுவார். சொத்து வழக்கில் நமக்கு வெற்றியைத் தந்து காப்பார் என்பது ஐதீகம்!

புதிதாக வீடு கட்ட வேண்டும் என மனை வாங்கி, தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது என கலங்குவோர், வராஹ மூர்த்திக்கு மனையின் மண்ணையும் ஒருரூபாய் நாணயத்தையும் மஞ்சள் துணியில் முடிந்துவைத்து தினமும் பிரார்த்தனை செய்துவந்தால், வீடு கட்டுவதற்காக இருந்த தடைகளையெல்லாம் தகர்த்தருளுவார் ஸ்ரீவராஹ மூர்த்தி.

பூமிக்கு அதிபதியான கிரகம் செவ்வாய் பகவான் மற்றும் வியாழ பகவான். குருவின் ஆதிக்கம் பலம் பெற்று வராஹ மூர்த்தியின் அனுக்கிரகமும் நமக்கு அமைந்துவிட்டால், நமக்கு மனை அமைந்து நாம் நினைத்தபடியே வீடு கட்டுவதற்கான யோகம் கிடைத்தருளுவார் ஸ்ரீவராஹ பெருமாள். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அருகில் அமைந்திருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம். அதேபோல், செவ்வாய் பகவானின் வடிவமாகத் திகழும் அங்காரகனுக்கும், நவக்கிரகத்தில் அமைந்துள்ள குரு பகவானுக்கும் அகல்தீபம் ஏற்றி வழிபடுவோம்.

'ஓம் ஸ்ரீவராக மூர்த்தியே நமஹ' என்று தினமும் 108 முறை பாராயணம் செய்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்களை ஈடேற்றி அருள்பாலிப்பார் வராஹர் பெருமாள். இல்லத்தில் இருந்தபடியே வழிபாட்டைச் செய்து வரலாம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் காலை அல்லது மாலை ஆறு மணியிலிருந்து ஏழரை மணிக்குள் இரண்டு அகல் தீபம் பூஜை அறையில் ஏற்றி ஓம் ஸ்ரீ வராக மூர்த்தியே நமஹ என 108 முறை போற்றி பராயணம் செய்து வழிபட்டு வருவோம்.

வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்த பிறகு ஒருமுறை ஸ்ரீவராக மூர்த்தியின் திருத்தலம் சென்று, சந்தனக்காப்பு செய்து வழிபடலாம். புஷ்பாபிஷேகம், திருமஞ்சனம் செய்து வழிபடுதல், துலாபாரப் பிரார்த்தனை, லட்சார்ச்சனை செய்தல் என்று நம்மால் முடிந்ததைச் செய்து ஸ்ரீவராஹ மூர்த்தியை வேண்டுவோம். வாழ்க்கையில் வளம்பெறவும், நம் வீட்டில் செல்வ கடாட்சம் நிறைந்திருக்கவும், நமக்கே நமக்கென வீடு மனை அமையவும் நிம்மதியும் ஆனந்தமும் தந்தருளுவார் வராஹப் பெருமாள்!

x