மகான்களின் சிலைகளை, படங்களை பூஜையறையில் வைக்கலாமா?


நம் எல்லார் வீடுகளிலும் முக்கியமானதொரு அங்கமாக இருப்பது பூஜையறைகள்தான். நம் வீட்டுக்கு தெய்வாம்சம்சத்தைத் தருவதும் நமக்குள் ஒருவித அமைதியைத் தருவதும் பூஜையறைகளே!

பூஜையறையில் எந்தெந்த சுவாமி படங்கள் இருக்கவேண்டும், மகான்களின் படங்களையும் சிலைகளையும் பூஜையறையில் வைக்கலாமா, நம் முன்னோர்களின் படங்களை பூஜையறையில் வைப்பது சரியா தவறா? அவற்றையெல்லாம் எந்தத் திசையில் வைக்கவேண்டும் என்றெல்லாம் ஏகத்துக்கும் குழப்பங்கள் இருக்கின்றன.

’’பூஜையறையில் என்னென்ன பொருட்களை வைக்கவேண்டும், எந்தெந்தப் படங்களை வைக்க வேண்டும், வைக்கக் கூடாத படங்கள் என இருக்கின்றனவா என்பதற்கு நிறைய ஆகம விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. அதேபோல், இறந்தவர்களின் படங்களை பூஜையறையில் வைக்கலாமா கூடாதா என்றும் சாஸ்திரம் விவரிக்கிறது.

இதில் பலருக்கும் இருக்கும் சந்தேகம்... மனித உருவில் வாழ்ந்த, நாமெல்லாரும் தெய்வமாகப் போற்றும் மகான்களின் படங்களையோ சிலைகளையோ வீட்டில் வைத்துக் கொள்ளலாமா? குறிப்பாக, பூஜையறையில் வைத்துக் கொள்ளலாமா? என்பது முதலான சந்தேகங்கள் நம்மில் நிறையபேருக்கு இருக்கின்றன

மனித உருவில் வாழ்ந்த தெய்வங்களான காஞ்சி மகாபெரியவர், சாய்பாபா, பகவான் ஸ்ரீரமணர், பகவான் யோகி ராம்சுரத்குமார் முதலான மகான்களின் புகைப்படங்களை இறந்தவர்களின் புகைப்படங்களாகவோ சிலைகளாகவோ கருதினால் அதை எப்படி பூஜை அறையில் வைக்க முடியும்?

“மகான்கள் மட்டுமல்ல ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் எத்தனையெத்தனை அதிசயங்களையும் அற்புதங்களையும் இந்த பூமியில் நிகழ்த்தியிருக்கிறார்கள். அவர்களைப் போற்றி வணங்குபவர்களும் அவர்களை தங்களின் குருநாதர்களாக ஏற்று அவர்கள் வழிநடப்பவர்களும் இருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட மகான்களின் புகைப்படங்களையோ சிலைகளையோ வீட்டில் வைக்கலாமா என்கிற சந்தேகமே நமக்கு அவசியமில்லை.

இவர்களின் படங்களையும் சிலைகளையும் வீட்டில் வைத்து வணங்குவதால் நிறைய நன்மைகளே நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நம் வீட்டில் இன்னும் சாந்நித்தியம் பெருகச் செய்வார்கள். நம் எண்ணங்களில் தெளிவையும் இல்லத்தில் அமைதியையும் தந்தருளி, நல்லதிர்வுகளை நம் இல்லத்திலும் உள்ளத்திலும் பெருகப் பண்ணுவார்கள்’’ என்று உறுதிபடக் கூறுகிறார் பாலாஜி சாஸ்திரிகள்.

நம் வீட்டில் வைக்க வேண்டிய, பூஜையறையில் வைத்து வணங்கவேண்டிய சுவாமி படங்கள் அல்லது சிலைகள் நிச்சயமாக இருக்கவேண்டியவை குறித்தும் அவர் விளக்குகிறார்.

’’நம் வீட்டுப் பூஜையறையில், நம்முடைய குலதெய்வப் படம் நிச்சயமாக இருக்கவேண்டும். அதேபோல், நம்முடைய, நம் வீட்டில் இருப்பவர்களின் நட்சத்திரங்களுக்கு உரிய தேவதையாகத் திகழும் சுவாமி படங்களையும் ராசிக்கு உரிய சித்தபுருஷர்கள், மகான்கள், ரிஷிகள், யோகிகள், நம்முடைய இஷ்ட தெய்வங்கள் படங்களை நிச்சயமாக வைத்து வணங்கவேண்டும்.

உங்கள் ஜாதகப்படியும் உங்கள் வீட்டில் உள்ள மனைவி, மக்களின் ஜாதகப்படியும் வணங்க வேண்டிய தெய்வங்களை முறையாக வணங்கி வந்தால் வாழ்க்கையில் உங்களை எவரும் வெல்ல முடியாத அளவிற்கு உயரத்தை நீங்கள் அடைய முடியும்.

சித்தர்கள், மகான்கள், ரிஷிகள், யோகிகள் முதலானோர் நம் பூமியில் வாழ்ந்தவர்கள். இன்றைக்கும் சூட்சுமமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். அதாவது, இறந்தாலும் கூட இறவா நிலையை அடைந்தவர்கள். அதனால்தான் அவர்களை முக்தி அடைந்துவிட்டார்கள் என்கிறோம். இன்றைக்கும் பல ஆலயங்களில் அமைந்திருக்கும் மூலமூர்த்திகளை, இரவு வேளைகளில், சித்தபுருஷர்களும் மகான்களும் சூட்சும வடிவில் வந்து பூஜைகள் செய்து ஆராதித்து வருகின்றனர் என ஸ்தல புராணங்கள் தெரிவிக்கின்றன.

மகான்கள் முக்தி அடைந்துவிட்டாலும் அவர்களுடைய ஆத்மா எப்போதும் அழியா நிலையைப் பெற்றிருக்கிறது. இதனால் அவர்களின் படங்களை இறந்தவர்களின் படங்களாகவோ சிலைகளாகவோ ஒப்பிடக்கூடாது. அவர்கள் இறந்தவர்கள் அல்ல... புண்ணிய ஆத்மாக்கள். மனித உருவில் நடமாடிய தெய்வங்கள். ஆகவே, மகான்கள், சித்தர்கள், யோகிகளின் திருவுருவப் படங்களையும் பூஜையறையில் வைத்து தாராளமாக வணங்கலாம். வழிபடலாம்.

அதேபோல், உக்கிரமான தெய்வத் திருவுருவப் படங்களையோ சிலைகளையோ வைத்துக்கொள்ளலாமா, வீட்டுப் பூஜையறையில் வைத்து வழிபடலாமா என்றும் பலருக்கும் சந்தேகம் உள்ளது.

வீட்டில் உக்கிர தெய்வங்களைத் தவிர சாத்வீகமாக இருக்கும் தெய்வத் திருவுருவங்களையும் சிலைகளையும் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். அதேபோல், மகான்கள், ரிஷிகள், சித்தர்கள், முனிவர் பெருமக்கள் படங்களையும் சிலைகளையும் நீங்கள் குருவாக மதிக்கும் மறைந்துவிட்ட மனிதர்களின் படங்களை வைத்து தாராளமாக வழிபடலாம். இவையெல்லாம் சாஸ்திர ஆகம விதிகளை மீறியதாக அர்த்தமில்லை. சாஸ்திரங்கள் வழியேயும் ஆகமங்கள் வழியேயும் நம் மனவிருப்பப்படியும் வழிபடுவதில் எந்தத் தவறேதுமில்லை.

முக்கியமாக, பூஜையறை பெரிதாக இருக்கிறது, சுவாமி படங்கள் நமக்கு நிறையவே இருக்கின்றன என்பதற்காகவெல்லாம் பூஜையறையில் சுவாமி படங்களை ஏகத்துக்கும் வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. அந்தந்த தெய்வங்களுக்கு உரிய நியமங்களின்படி, அவர்களை பூஜிக்கவேண்டும். ஆராதிக்க வேண்டும். அப்படி பூஜித்து ஆராதித்தால்தான் அவர்களின் மனம் குளிரும். அவர்களின் ஆசியும் அருளும் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்.

அதேபோல், பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். சுத்தமே தெய்வாம்சத்தை நிலைநிறுத்தச் செய்யும், அங்கேயே குடிகொள்ளவைக்கும்’’ என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.

x