குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், சங்கடஹர சதுர்த்தி இணைந்த நன்னாளில், ஆனைமுகத்தானை வழிபடுவோம். ஞானமும் யோகமும் தந்தருளுவார் வேழமுகத்தான்.
எந்தத் தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் நாம் முதலில் வணங்கவேண்டிய தெய்வம் விநாயகப் பெருமான் என்பது தெரியும்தானே. பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அரசர்கள் காலத்தின் கோயில்களில், உள்ளே நுழைந்ததும் விநாயகரின் சந்நிதியைத்தான் முதலில் அமைத்திருப்பார்கள். கோயில் ஆகமவிதிகள், விநாயகர் வழிபாட்டைத்தான் முதலில் வலியுறுத்துகின்றன.
நம் சாஸ்திர சடங்குகளில் கூட, எந்த பூஜை செய்வதாக இருந்தாலும், முதலில் பிள்ளையார் பூஜையே பிரதானமாக அமைந்திருக்கிறது. விளக்குபூஜை முதலான வழிபாடுகளில் கூட, மஞ்சளைப் பிடித்து பிள்ளையாராக பாவித்து பூஜைகளைச் செய்வது நம் வழக்கம். அதனால்தான் கணபதி பெருமானை, முழுமுதற் கடவுள் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.
சிவபெருமானுக்கு திரயோதசி திதி போல, முருகப்பெருமானுக்கு சஷ்டி திதி போல்,மகாவிஷ்ணுவுக்கு ஏகாதசி திதி போல், விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளாக சங்கடஹர சதுர்த்தி போற்றப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், காலையும் மாலையும் விநாயகப் பெருமானை வணங்கி வழிபடுவது வளங்களையும் நலங்களையும் தந்தருளும். ஆனைமுகனுக்கு வண்ணவண்ணப் பூக்களெல்லாம் சமர்ப்பிக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை. அருகம்புல்லே போதுமானது. அருகம்புல் சார்த்தி அலங்கரித்தாலே அருளும்பொருளும் அள்ளித்தந்தருளுவார் ஆனைமுகத்தான்.
அதேபோல், வெள்ளெருக்கு மலர் பறித்து, மாலையாக்கி அவருக்கு சார்த்தினாலே நம் வாழ்வின் துக்கங்களையெல்லாம் போக்கி, சங்கடங்களையெல்லாம் நீக்கி அருளுவார் பிள்ளையாரப்பன்.
இன்று சங்கடஹர சதுர்த்தியும் இணைந்த நன்னாள். குருவாரமும் சங்கடஹர சதுர்த்தியும் இணைந்த நன்னாளில், பிள்ளையாரை மனதார வேண்டுவோம். அவல் பாயசம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்வது இன்னும் விசேஷமானது. அதேபோல், பிள்ளையாருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்வதும் அல்லது சுண்டல் நைவேத்தியம் செய்வதும் நற்பலன்களைக் கொடுக்கவல்லது என்பார்கள்.
விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், 9 முறை அல்லது 11 முறை பிள்ளையாருக்குத் தோப்புக்கரணமிட்டு (தோர்பு கர்ணம்) பிராகார வலம் வந்து பிரார்த்தனை செய்வதும் நம்மையும் நம் குடும்பத்தாரையும் காத்தருளும் என்பது ஐதீகம்.
மாலையில், ஆலயங்களில் கணபதிபெருமானுக்கு நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டு, கண்ணார கணபதியைத் தொழுது வேண்டிக்கொள்வோம். வேண்டிய வரங்களைத் தந்தருளுவான் வேழமுகத்தான்! ஞானமும் யோகமும் தந்து நம்மைக் காத்தருளுவான் விநாயகப் பெருமான்.