நல்ல வாழ்க்கைத் துணையை தருவாள் ஆண்டாள்!


கோதை என்று புகழப்படும் ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்கு மகளாகத் தோன்றியவர். அந்த ரங்கனையே தன் மணாளனாக நினைத்து மனமுருகி வேண்டியவர். ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும். திருமணமாகாத பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வந்தால் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம். மேலும், பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை மனமுருகி வேண்டிக் கொண்டு வழிபட்டால், பெண்கள், தாங்கள் விரும்பியபடி நல்ல கணவரைக் கிடைக்கப்பெறுவர் என்பது உறுதி.

ஜாதகத்தில் தோஷங்களோ, களத்திர ஸ்தானத்தில் கிரகங்களின் சேர்க்கை சரியில்லாமல் இருந்தாலோ, கிரகங்களின் பார்வை சரியில்லாமல் இருந்தாலோ திருமணம் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். 'எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் திருமணம் நடக்கலையே...’ என்ற கவலையுடன் இருப்பார்கள். எனவே திருமணத் தடை நீங்க வேண்டும் என்று கலங்கித் தவிப்பார்கள். திருப்பாவை பாடி ஆண்டாளை தரிசனம் செய்தால் போதும்... திருமணத் தடைகள் நீங்கி மனதிற்கு பிடித்த அற்புதமான வரன் அமையும்.

பூரம் விரதம் போலவே திருவோணம் விரதமும் மகிமை வாய்ந்தது. மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளை வேண்டி விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால் திருமணமாகாத கன்னியருக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அதுமட்டுமா? ஒவ்வொரு மாதமும் வருகிற பூரம் நட்சத்திர நாளில், ஆண்டாளை நினைத்து திருப்பாவை பாடி பெருமாளை ஸேவித்துப் பிரார்த்தனை செய்தால், கல்யாண வரம் கைகூடி வரும்!

சிறப்புகள் நிறைந்த தை மாதத்தில் பூர நட்சத்திர நாளில் (08.02.2023 புதன்கிழமை) காலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் பாக்கியங்கள் கிடைப்பது நிச்சயம். ஆண்டாளுக்கு பூக்களால் அலங்கரித்து, திருப்பாவையின் முப்பது பாடல்களையும் பாராயணம் செய்து, வேண்டிக்கொள்ளுங்கள். மனதுக்கு உகந்த நல்ல வாழ்க்கைத் துணை நிச்சயம் அமையும் என்கிறார் பாலாஜி பட்டாச்சார்யர்.

விரதம் இருக்கும் நாளில், நெய், பால் சேர்த்த உணவு வகைகள் முதலானவற்றைத் தவிர்ப்பது நல்லது. எளிமையான, எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் பூர நட்சத்திர நாளில், ஆண்டாளை நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். வேண்டிய வரத்தைத் தந்தருளுவாள் ஆண்டாள் நாச்சியார்!

x