நம் செயலுக்கு வெற்றியைத் தருவார் ஸ்ரீநரசிம்மர்!


ஸ்ரீநரசிம்ம மந்திரம் சொல்லி, துளசியால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால், நம் காரியத்தடைகள் அனைத்தும் அகலும். எதிர்ப்புகள் யாவும் விலகும். செய்யும் செயலில் வெற்றியைத் தந்தருளுவார் ஸ்ரீநரசிங்கப் பெருமாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

வழிபாடுகள் ஒவ்வொன்றுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொரு தெய்வத்தையும் உரிய நாளில் வணங்குவதும் உரிய மந்திரங்களைச் சொல்லி வழிபடுவதும் விசேஷமானவை. நற்பலன்களை வழங்கக் கூடியவை. அதில் குறிப்பிடத்தக்க வழிபாடாக, ஸ்ரீநரசிம்ம வழிபாட்டைச் சொல்வார்கள் ஆச்சார்யர்கள்.

காரியத்தில் தடை என்பது நம் ஒவ்வொருவர் வாழ்வில், ஏதேனும் ஒரு கட்டத்தில் இருந்துகொண்டே இருக்கும். ‘’என்னன்னே தெரியல. இந்தக் காரியத்தைச் செய்யணும்னு நினைக்கிறேன். தட்டிக்கிட்டே போகுது’’ என்று சொல்லிக்கொண்டே இருப்போம்.

சில காரியங்கள் நாம் நினைத்ததைப் போல் திட்டமிடாமலே நடந்திருக்கும். ஆனால் சில காரியங்கள் நாம் என்ன முயற்சி செய்தாலும், ஏதேனும் ஒரு சில தடங்கலைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். எவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டாலும் காரியத்துக்கு முட்டுக்கட்டைகள் வந்துகொண்டே இருக்கும். இவற்றில் இருந்து நமக்கு நிவாரணம் தந்து, நம்மையும் நம் காரியத்தையும் வெற்றியாக்கிக் கொடுக்கக் காத்திருக்கிறார் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி!

"நரசிம்ம மந்திரத்தைச் சொல்லி, நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால், தொட்ட காரியங்களும் நினைத்த காரியங்களும் தங்கு தடையில்லாமல் விரைவில் நடந்தேறும் என்கிறது ஸ்ரீநரசிம்ம புராணம். எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் நரசிம்மருக்கு உரிய ஸ்ரீமந்திர ராஜபத ஸ்தோத்திரத்தைச் சொல்லி வருவோம்; அதற்கு உரிய பலன்களை உடனே பெறலாம் என்பது உறுதி’’ என்கிறார் பாண்டுரங்க பட்டாச்சார்யர்.

அந்த மந்திரம் இதுதான் :

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து

பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்

ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

இந்த ஸ்லோகத்தை தினமும் மூன்று முறையேனும் ஜபித்து வந்தாலே போதுமானது. அருகில் உள்ள ஸ்ரீநரசிம்மர் ஆலயத்துக்கு, புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் சென்று தரிசித்து வரலாம். அல்லது உங்களுக்கு முடியும்போது, ஆலயம் சென்று ஆலயத்தில் அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து, இந்த மந்திரத்தை கண்கள் மூடி ஜபித்து வருவது, மும்மடங்கு பலன்களைத் தந்தருளும்!

’பக்தி அற்றவர்களால் அடைய முடியாத இடத்தில் இருப்பவனே! தாயாரின் கர்ப்பத்தில் அவதரித்திருந்தால் பக்தர்களுக்கு உதவி செய்ய வர தாமதமாகும் என்று தூணில் இருந்து பிளந்து அவதரித்தவனே! பக்தர்கள் நினைத்தவுடன், உன்னை வேண்டி அழைத்ததும் அவர்களின் துன்பத்தைப் போக்குபவனே! நரசிம்ம பெருமாளே... உன் திருவடியைச் சரணடைகிறேன்’ என்று இந்த மந்திரத்துக்கு அர்த்தம்! .

அதேபோல்,நரசிம்மர் மூல மந்திரம் ஜபித்து வருவதும் எதிர்ப்புகளையெல்லாம் ஒடுக்கி, நம் தடைகளையெல்லாம் தகர்த்துக் காக்கும்.

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்

ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்

பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்

இந்த நரசிம்மரின் இந்த மூல மந்திரத்தை 108 முறை சொல்லி துளசியால் ஸ்ரீநரசிம்மருக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வருவோம். சிவப்பு நிற மலர்களை நரசிம்மருக்கு சார்த்தி வணங்கி வருவதும் ஸ்ரீநரசிம்மரின் பேரருளைப் பெற்றுத் தரும். காரியம் அனைத்தையும் ஜெயமாக்கித் தந்தருளுவார் ஸ்ரீநரசிம்ம பெருமாள்!

x