ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.1 கோடியே 9 லட்சம்!


ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரொக்கம் ரூ. 1 கோடியே 9 லட்சம் கிடைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் சாமி தரிசனத்திற்கு பிறகு உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனர். பக்தர்களின் வருகையை பொறுத்து, குறிப்பிட்ட கால அவகாசங்களில் இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும்.

இதன்படி உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணும் பணி நேற்று (வியாழக்கிழமை) காலை துவங்கி இரவு வரையிலும் நடைபெற்றது. கோயில் மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் நிகழ்ச்சிக்கு இணை ஆணையர் சிவராமகுமார் தலைமை வகித்தார்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி, அம்பாள் மற்றும் இதர சுவாமிகள் சன்னிதியில் உள்ள உண்டியல்களும், கோசாலை, யானை பராமரிப்பு மற்றும் திருப்பணி உண்டியல்களும் எண்ணப்பட்டன. இதில், 1 கோடியே 9 லட்சத்து 7 ஆயிரத்து 89 ரூபாய் ரொக்கமாகவும் (ரூ.1,09,07,089), 50 கிராம் தங்கம், 2 கிலோ 400 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளதாக ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

x