திருவாதிரையும் வியாழக்கிழமையும் இணைந்த இந்த நாளில், குரு ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குவோம். மாணவர்கள், கல்வியில் சிறந்துவிளங்குவார்கள். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவார்கள்.
’குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர;
குரு சாட்ஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ’
- என்று சொல்கிறது ஸ்லோகம். குரு பிரம்மாவே நம்மைப் படைத்த கடவுள். எனவே், பிரம்மாவை முதலில் வணங்கச் சொல்கிறது இந்த் ஸ்லோகம். குருவுக்கு உகந்தநாள் வியாழக்கிழமை.
பிரம்மாவை, வியாழக்கிழமைகளில் வணங்கி வழிபடுவது மகத்துவம் மிக்கது. நம்மைப் படைத்த கடவுளான பிரம்மாவை, பிரம்ம காயத்ரி சொல்லி வழிபடுவோம். அதேபோல், அதிகாலை பிரம்மமுகூர்த்த வேளையில், வீட்டில் கிழக்குப் பார்க்க அமர்ந்துகொண்டு, பிரம்மாவை நினைத்து தியானிப்பதும் பல மடங்கு பலன்களை வாரி வழங்கும் சக்தியைக் கொடுக்கும் என்கிறார் திருப்பட்டூர் பாஸ்கர குருக்கள்.
அதேபோல், தட்சிணாமூர்த்தி என்பது சிவாம்சம். சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாகத் திகழ்கிறார். ஞானகுருவாக அருளுகிறார். சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தடியில் அமர்ந்தபடி உபதேசித்து அருளினார் என்கிறது புராணம். கல்லால மரத்தடியில் அமர்ந்து கொண்டு, சனகாதி முனிவர்களுக்கு, சின் முத்திரை காட்டியபடி ஞானோபதேசம் அருளும் தட்சிணாமூர்த்தியைத்தான் சிவாலயங்களில் தரிசித்து வருகிறோம். வியாழக்கிழமைகளில் குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசித்து, அவருக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வேண்டிக்கொள்வது ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளக்கூடியது. மாணவர்கள், தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வந்தால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்!
அனைத்து சிவாலயங்களிலும் கோஷ்டத்தில், தென்முகக் கடவுளாக, தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். வியாழனில், தட்சிணாமூர்த்தியை வழிபடுவோம். தனம் தானியம் தந்து, கல்வியையும் கலைகளையும் தந்து நம்மை செம்மையாக வாழச் செய்து அருளிக் காப்பார் குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
குரு பிரகஸ்பதி என்று சொல்கிறோம். இவர்தான் நவக்கிரகங்களில் குரு பகவானாகத் திகழ்கிறார். தேவர்களின் குரு பிரகஸ்பதி என்கிறது புராணம். சிவனருளால், நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, குரு கிரகமாக இருக்கும் வரத்தைப் பெற்றார் பிரகஸ்பதி என்கிறது புராணம். குருப்பெயர்ச்சி என்பது இவருடைய நகர்வைக் கொண்டே சொல்லப்படுகிறது.
வியாழக்கிழமைகளில், நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை, குரு பிரகஸ்பதியை மனதார வேண்டுவோம். நவக்கிரக குருவுக்கு விளக்கேற்றி பிரார்த்தனை செய்வோம். குருவின் அனுக்கிரகம் கிடைக்கப் பெறலாம். மேலும், கிரக தோஷங்களில் இருந்து நம்மைக் காத்தருளுவார் குரு பகவான்!
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திட்டை எனும் திருத்தலத்தில் ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கே, குரு பிரகஸ்பதி, நவக்கிரக குருபகவான் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். அதேபோல், சென்னை பாடி திருவலிதாயத்தில் குரு பகவான் சந்நிதி அமைந்திருக்கிறது. பிரம்மாவுக்கு ஆலயங்கள் குறைவுதான்.
திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர், தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருக்கண்டியூர் பிரம்ம சிர கண்டீஸ்வரர் கோயில், கொடுமுடி திருத்தலம் முதலான தலங்களில் பிரம்மாவுக்கு சந்நிதிகள் இருக்கின்றன. மற்றபடி, சிவாலயங்களில் உள்ள கோஷ்டத்தில் பிரம்மாவை தரிசிக்கலாம்.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில், 28-வது கிலோமீட்டரில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் 5 கி.மீ. பயணித்தால் திருப்பட்டூர் தலத்தை அடையலாம். இங்கே உள்ள பிரம்ம சம்பத்கெளரி அம்பாள் சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில், பிரம்மாவுக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது. தலையெழுத்தையே திருத்தி அருளும் திருப்பட்டூர் திருத்தலத்து பிரம்மாவை வேண்டிக்கொள்ளுங்கள். பிரம்மாவை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்துகொள்வோம். நம் வாழ்க்கையை திருத்தி அருளுவார் பிரம்மா.
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குருவருள் இருந்தால்தான் திருவருள் நிச்சயம் என்பார்கள். நம் குருமார்களை, குரு பிரம்மாவை, குரு விஷ்ணுவை, குரு சிவனாரை, குரு தட்சிணாமூர்த்தியை, குரு பிரகஸ்பதியை ஆத்மார்த்தமாக வேண்டுவோம். அருளும் பொருளும் அள்ளித்தருவார்கள் குருபகவான்கள்!