தை கிருத்திகையில் துயரங்களைப் போக்கும் வேலவனைத் தரிசிப்போம். வேதனைகளில் இருந்து விடுபடச் செய்வான் கந்தகுமாரன்.
கிருத்திகை, விசாகம், பூசம் இம்மூன்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திர நாட்களாகப் போற்றப்படுகின்றன. இந்த நாட்களில், முருகப்பெருமனை விரதமிருந்து தரிசிப்பது விசேஷமானது. நற்பலன்களை வழங்கக்கூடியது என்பார்கள்.
தை மாதத்தில் வருகிற பூசம் தைப்பூசத் திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு முருகப்பெருமானைத் தரிசனம் செய்வது வழக்கம். மேலும், காவடி எடுத்துவந்து தரிசிப்பவர்களும் உண்டு.
பழநி மட்டுமின்றி, முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் அனைத்துக் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழாவானது விமரிசையாகக் கொண்டாடப்படும். அன்றைய நாளில், முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அலங்கார வழிபாடுகளும் அமர்க்களப்படும்.
அதேபோல், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட கார்த்திகேயனை, கிருத்திகை நட்சத்திர நாளில் விரதமிருந்து வழிபடுகிற பக்தர்களும் ஏராளம். ஒவ்வொரு மாதமும் வருகிற கிருத்திகை நட்சத்திர நாளும் விரதம் மேற்கொள்ளவும் முருக தரிசனம் மேற்கொள்ளவும் உகந்தநாள் தான் என்றபோதும் தை மாதக் கிருத்திகை நட்சத்திர நாள், மிக முக்கியமான நாளாகப்போற்றி வழிபடப்படுகிறது.
தை கிருத்திகையில் விரதம் மேற்கொண்டு காலையும் மாலையும் முருகப்பெருமானை கந்தசஷ்டி பாராயணம் செய்து வழிபடுவது நம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும். அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி, வேண்டிக்கொண்டால், நம் கடன் பிரச்சினையில் இருந்து மீளச்செய்வார், வீடு மனை யோகங்களை வழங்கியருளுவார் வடிவேலன் என்கிறார்கள் பக்தர்கள்.
தை மாதக் கிருத்திகை நாளில், கவலைகளைத் தீர்க்கும் கந்தபெருமானை வணங்கி வழிபடுவோம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, நான்கு பேருக்கேனும் வழங்கி வள்ளி மணாளனின் பேரருளைப் பெறுவோம்.
வேல்மாறல் பாராயணம் செய்து இந்த நன்னாளில் முருகக் கடவுளை வேண்டிக்கொண்டால், நம் வேதனைகள் அனைத்தும் பறந்தோடும். துயரங்கள் அனைத்தையும் போக்கியருளுவான் வெற்றிவடிவேலவன்!
அறுபடை வீடுகளான, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழநி, சுவாமிமலை, திருத்தணி ஆகிய தலங்களில் இந்த தை கிருத்திகை நாளில், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் விசேஷ பூஜைகளும் நடைபெறும்.
திருச்சி வயலூரில் காலையும் மாலையும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும். சென்னை பாரிமுனையில் உள்ள கந்தஸ்வாமி கோயில், வடபழநி ஆலயம், குமரகோட்டம் என்று சொல்லப்படும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முருகப்பெருமான் கோயில் ஆகியவற்றிலும் குடம்குடமாக பாலபிஷேகம் நடைபெறும்.
மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில், தனிக்கோயிலாகக் குடிகொண்டிருக்கும் ஸ்ரீசுப்ரமண்யருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். திருச்சி சமயபுரம் அருகில் உள்ள திருப்பட்டூர் பிரம்மா கோயிலில் உள்ள முருகப்பெருமான் விசேஷமானவர். இவருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், வழக்குப் பிரச்சினைகளில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.