ரத சப்தமியில் ஏழு எருக்க இலை வைத்துக் குளிக்கவேண்டும் - ஏன்?


சூரிய பகவான்

இன்று (28-ம் தேதி சனிக்கிழமை) ரத சப்தமி நன்னாள். அமாவாசைக்குப் பிறகான ஏழாம் நாளும் பெளர்ணமிக்குப் பிறகு வரும் ஏழாம் நாளும் சப்தமி எனப்படும். சப்தமி என்றால் ஏழு என்று அர்த்தம். தை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஏழாம் நாள் ரத சப்தமி என்று போற்றப்படுகிறது.

சூரிய பகவானுக்கு உரிய நாள் ரத சப்தமி. ஏழு வண்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில், சூரியனார் வலம் வருவதாகத் தெரிவிக்கிறது புராணம்!

சூரிய ஒளி இல்லாவிட்டால் பூவுலகில் எதுவுமில்லை. எந்த ஜீவராசிகளும் இருக்காது. அதனால்தான் உயிர்களைக் காக்கும் பரம்பொருளான திருமாலும் சூரியனும் ஒன்றாகக் கருதப்படுகின்றனர் என புராணங்கள் விவரிக்கின்றன. சூரிய பகவானின் ரதத்திற்கு அருணன் சாரதியாக உள்ளார் என்கிறது புராணம்.

ரத சப்தமி நாளில், கிழக்கு நோக்கி நின்றபடி நீராட வேண்டும். அப்போது, எருக்க இலைகளை சிரசின் மேல் வைத்துக்கொண்டு, கிழக்கு நோக்கி நின்று நீராடுவது அவசியம். கொஞ்சம் அட்சதையும் சேர்த்து வைத்துக் கொண்டு நீராடவேண்டும். கூடவே, கொஞ்சம், பசுஞ்சாணத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். பெண்கள் இவற்றுடன், மஞ்சளும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

ரதசப்தமி திருநாளில் சூரியனின் கிரணங்கள்... எருக்க இலைகள் மூலம் ஈர்க்கப்பட்டு, உடலில் ஊடுருவிச் சென்று, வியாதிகளைப் போக்கி நமக்கு ஆரோக்கியத்தைத் தருகின்றன என்கிறது சாஸ்திரமும் விஞ்ஞானமும். அதேபோல், இந்த தினத்தில் ஆறு அல்லது குளம் முதலான நீர்நிலைகளில் நீராடுவது விசேஷமானது என்றும் மகத்துவம் நிறைந்தது என்றும் ஞான நூல்கள் விவரித்துள்ளன.

மாசி மாதம் விசேஷமான மாதம். தை மாத அமாவாசைக்குப் பின்னர் மாசி மாதத்துக்கு முந்தையதாக, வரக்கூடிய சப்தமி, ரத சப்தமி என்று போற்றப்படுகிறது. ரதசப்தமி நாளில், வீட்டு வாசலை மெழுகி, தேர்க்கோலம் இட்டு அலங்கரிக்க வேண்டும். பிறகு, சூரிய பகவானுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜித்து பிரார்த்தனை செய்வோம். கோதுமை கலந்த உணவு அல்லது பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.

இந்தப் புண்ணிய தினத்தில், வீட்டு பூஜையறையிலும் சூரிய ரதம் போன்று கோலம் வரைந்து, உரிய ஸ்லோகங்கள் கூறி சூரியனை வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும். எதிர்ப்புகளெல்லாம் விலகும். தீய சக்திகள் நம்மை அண்டாமல் சூரிய பகவான் காத்தருளுவார்!

தன்னுடய சுழற்சிப் பாதையில் ஆறு மாதமாகச் சூரியனிடமிருந்து தொலைவில் சுற்றிக் கொண்டிருந்த பூமி அடுத்த ஆறு மாதங்கள் சூரியனுக்கு நெருக்கமான பாதையில் சுற்ற ஆரம்பிக்கிறது. இதை தட்சிணாயனம், உத்திராயனம் என்கிறோம். ரத சப்தமி நாளான இந்த நன்னாளில் சூரியனைப் போற்றுவோம். வணங்குவோம்.

மகாபாரத யுத்தத்தில் வீழ்ந்தார் பீஷ்மர். ஆனாலும் புண்ணியங்கள் நிறைந்த உத்தராயன புண்ய காலத்தில் இறந்தால் புண்ணியம் என மரணத்துக்காகக் காத்திருந்தார். அப்படி காத்திருக்கும் வரத்தை, அதாவது நினைத்த நாளில் இறந்து போகிற வரத்தைப் பெற்றிருந்தார் பீஷ்மர்.

ஆனால், செய்த பாவங்கள் அவரை தடுத்துக் கொண்டே வந்தன. முக்கியமாக, சபையில், அத்தனை பேருக்கு நடுவே பாஞ்சாலி மானபங்கப்படுத்தப்பட்டாள். அப்போது, அதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பாவம்தான் இப்போது சாக விடாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறது என்பதை வேதவியாசர், பீஷ்மரிடம் விவரித்தார். தவறு செய்வது மட்டுமே பாவமல்ல; தவறைத் தட்டிக்கேட்காமல் பார்த்துக்கொண்டு நிற்பதும் கூட பாவம்தான் என்றார் வியாசர் பெருமான்

அத்துடன் பரிகாரம் ஒன்றையும் சொன்னார் வியாசர்.

அதன்படி, ’’புத்தியால் செய்த பாவம் நீங்க தலையில் ஒரு எருக்க இலை, கண்களால் செய்த பாவம் நீங்க, கண்களில் இரண்டு எருக்க இலைகள், தோள்களுக்கு இரண்டு, கால்களுக்கு இரண்டு என எருக்கம் இலைகளை உடலில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என அருளினார் வியாசர். அம்புப்படுக்கையில் இருந்த பீஷ்மருக்கு அவ்வாறு எருக்க இலைகள் வைக்கப்பட்டன. சூரிய உதயத்தின் போது, உயிர் பிரிந்தது என்கிறது புராணம்!

தர்ப்பணம் செய்வது என்பது, வழக்கமாக எள்ளும் தண்ணீரும் விடுவது போன்றது அல்ல. வெறுமனே தண்ணீரைக் கொண்டு மூன்று முறை அர்க்யமாக விடவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ரதசப்தமிக்கு மறுநாள் ( 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) பீஷ்மாஷ்டமி. ரத சப்தமி வழிபாட்டுடன் மறுநாள் பீஷ்மாஷ்டமியும் கொண்டாடப்படுகிறது. ரதசப்தமியில் எருக்க இலை கொண்டு நீராடுவதும் மறுநாள் பீஷ்டாஷ்மியில் அவருக்காக தர்ப்பணம் செய்வதும் குருவருளையும் இறையருளையும் தந்தருளும். சூரியன் முதலான கிரகங்களால் உண்டான தோஷங்கள் அனைத்தும் விலகும். புத்தியால் நாம் செய்த பாவமும் கண்களால் நாம் செய்த பாவமும் தோள்களைக் கொண்டு செய்த பாவங்களும் கால்களால் செய்த பாவங்களும் நீங்கும் என்கிறார்கள்.

x