பூந்தமல்லி: வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்


பட விளக்கம்: பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள்கோயிலில் இன்று காலை வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.  உள் படம்:  ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வரதராஜப்பெருமாள்.

பூந்தமல்லி: பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் அமைந்துள்ளது பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்தாண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்ற விழா, இன்று காலை 10 மணியளவில் பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயிலில் நடைபெற்றது. இதில் கொடிக்கம்பம் அருகே உள்ள உற்சவ மண்டபத்தில் தங்க ஆபரணங்கள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீற்றிருக்க, கொடி கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

தொடர்ந்து, வரதராஜப்பெருமாள் தங்கமுலாம் பூசப்பட்ட கேடயத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வைகாசி பிரம்மோற்சவ விழா வரும் 29 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில், யாளி வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வரதராஜப்பெருமாள் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

இப்பிரம்மோற்சவ விழாவில், வரும் 22-ம் தேதி காலை கருடசேவையும், 28-ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

x