திருவையாறு வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு


திருவையாறு ராயம்பேட்டை வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேகம்.

தஞ்சாவூர் / நாகப்பட்டினம் / திருவாரூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ராயம்பேட்டையில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, வரதராஜ பெருமாள் சுவாமி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சந்நிதிகள் திருப்பணிகள் செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டன.

இதையடுத்து, மே 17-ம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கி, யாகசாலை பூஜை, கும்ப பூஜை, வாஸ்து சாந்தி, மகாலட்சுமி, சுதர்சன ஹோமம், லஷ்மி நரசிங்க ஹோமம், தன்வந்தரி ஹோமம், மங்கல மகா பூர்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, நேற்று காலை 4-ம் கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று, கடம் புறப்பட்டு, சந்நிதிகளை வலம் வந்து, காலை 9.30 மணிக்கு கோயில் விமானத்துக்கு பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், மாலை திருக்கல்யாண உற்சவம், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாகை மாவட்டம் நாகூர் சின்னக்கடைத் தெரு பகுதியில் பழமை வாய்ந்த சியாமளாதேவி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று முடிந்தன.

இதையடுத்து, மே 17-ம் தேதி அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 2-ம் கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்ற நிலையில், மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து, மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சியாமளா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் சேங்கனூர் கிராமத்தில் உள்ள சோமநாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான யாக சாலை பூஜைகள் மே 17-ம் தொடங்கின.

தொடர்ந்து, 6 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோயில் விமானம் மற்றும் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பி.எஸ்.ராஜா, நன்னிலம் அறநிலையத் துறை ஆய்வாளர் கருணாநிதி, அறங்காவலர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

x