தன்னை நாடி வரும் அனைவரின் ஏழு ஜென்மப் பாவங்களையும் போக்கி அருள்கிறார் ஸ்ரீபாபநாசநாதர். அம்பாளின் திருநாமம் உலகம்மை நாயகி. ஆயிரம் வருடப் பழைமை வாய்ந்த ஆலயமாகத் திகழ்கிறது பாபநாசம் திருக்கோயில். நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது பாபநாசம் திருத்தலம்.
திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் திருமணம். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் சிவகணங்களும் அனைத்துக் கடவுளர்களும் அங்கே வந்திருக்க, வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்திய முனிவரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன்.
ஆனால் அகத்தியருக்கோ வருத்தம். ‘சிவ - பார்வதி திருமணக் காட்சியைத் தரிசிக்கமுடியவில்லையே...’ என்று! சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமண கோலத்தை காட்டியருளினார் சிவன் .
இங்கே... பாபநாசம் கோயிலின் கருவறைக்கு பின்புறம் பிராகாரத்தில் கல்யாணசுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த திருக்கோலத்தில் சிவனார் இருக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி லோபாமுத்திரையும் வணங்கியபடி காட்சி தருகின்றனர்.
அசுர குருவான சுக்கிராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா, அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினான். இதனை அறிந்த இந்திரன் அசுரக்கூட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட துவஷ்டாவைக் கொன்றான். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.
பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், ’’பாபநாசம் தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும்’’ என வழிகாட்டினார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான் என்கிறது ஸ்தல புராணம். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை பாபநாசநாதர் என்கிறது புராணம். இந்தத் தலத்திற்கு இந்திரகீழ க்ஷேத்திரம் என்ற பெயரும் இருந்ததாகப் போற்றுகிறது புராணம்!
அகத்தியரின் சீடரான ரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்கப் பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகின்றனவோ, அங்கெல்லாம் லிங்கப் பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் பெருமான் கூறினார். அதன்படி ரோமச முனிவர், தாமரை மலர்களை நீரில் விட்டார். அந்த ஒன்பது பூக்கள் ஒன்பது இடங்களில் கரை ஒதுங்கின. அந்தக் கரையோரங்களில், சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் ரோமசர் முனிவர். இவை நவ கயிலாயத் திருத்தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டதாகவும் சொல்கிறது புராணம். நவ கயிலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் போற்றப்படுகிறது, பாபநாசம் திருத்தலம்!
இந்தத் தலத்து லிங்கத்திற்கு முக்கிளா லிங்கம் என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிராகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இந்தப் பெயர் அமைந்ததாம்!
பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து ஓடிவரும் தாமிரபரணி நதி இந்தக் கோயிலுக்கு அருகேதான் சமநிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின்போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன. .
வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
அம்பாள் உலகம்மை சந்நிதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரலி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர். இந்த மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண பாக்கியம், புத்திர வரம் கிடைக்கப்பெறலாம் என்பது ஐதீகம். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்கிறார் சங்கர பட்டர்.
சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், அகத்தியருக்கு திருமணக்காட்சி விழா, தைப்பூசம் ஆகியவை சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. தை அமாவாசை முதலான முன்னோருக்கு உரிய நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து திதி கொடுத்து தர்ப்பண காரியங்களைச் செய்கின்றனர்.
ராஜகோபுரத்தை அடுத்து நடராஜ பெருமான் தனிச்சந்நிதியில் ஆனந்ததாண்டவ கோலத்தில் இருக்கிறார். இவரை, ’புனுகு சபாபதி’ என அழைக்கின்றனர். மேலும், கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் ஏதும் இருந்தால், குழந்தைகளைத் தத்துக் கொடுத்து பெற்றுக் கொள்ளும் சடங்கும் இந்தத் தலத்தில் நடைபெறுகிறது.
பாபநாச நாதருக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினால், பாவங்கள் அனைத்தும் தீரும் என்று விவரிக்கிறது ஸ்தல புராணம்.
வாழ்வில் ஒருமுறையேனும் பாபநாசம் திருத்தலத்துக்கு வந்து, தாமிரபரணியில் நீராடி, பாபநாசநாதரை வழிபட்டுப் பிரார்த்தித்தால், நம் ஏழு ஜென்ம பாவங்களும் நீங்கும். நம் கர்மவினைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் பக்தர்கள்!