கள்ளழகர் ஆடி தேரோட்டம்: ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்க வடம்பிடித்திழுத்த பக்தர்கள்


மதுரை: மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இன்று (ஜூலை 21) ஆடிப் பெருந் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ''கோவிந்தா, கோவிந்தா'' கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

மதுரை அழகர்கோவிலில் சித்திரை மாத பவுர்ணமியன்று வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியும், ஆடி பவுர்ணமியன்று நடைபெறும் தேரோட்டமும் சிறப்புக்குரிய திருவிழாக்களாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வர். அதன்படி நடப்பாண்டு ஆடிப் பெருந்திருவிழா ஜூலை 13-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிரவு அன்ன வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.

அதனைத்தொடர்ந்து தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும் மாலையில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளினர். சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் எழுந்தருளினார். முக்கிய விழாவான தேரோட்டத்தை (9-ம் நாள்) முன்னிட்டு இன்று அதிகாலையில் 5.15 மணியளவில் கோயிலிலிருந்து சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் புறப்பாடாகி 5.35 மணிக்குள் தேரில் எழுந்தருளினார்.

பின்னர் தீப, தூப ஆராதனைகள் நடந்தது. கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெற்று பின்னர் காலை 7.05 மணியளவில் தேர் நிலையிலிருந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ''கோவிந்தா, கோவிந்தா'' கோஷங்கள் முழங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு ரத வீதிகளிலும் காத்திருந்தனர்.

மக்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது கண்டு பக்தர்கள் மகிழ்ந்தனர். காலை 7.05-க்கு நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக காலை 10 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார். மாலையில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை, சந்தனம் சாத்துதல் நடைபெற்றது. தீபாராதனையும் நடைபெற்றது. இதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து 10-ம் நாளான நாளை (ஜூலை 22) சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருள்கிறார். ஜூலை 23-ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் லெ.கலைவாணன், அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், மற்றும் கண்காணிப்பாளர்கள், அறங்காவலர்கள் குழுவினர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

x