’மாதங்களில் நான் மார்கழி’ என்று ஏன் சொன்னார் கிருஷ்ணர்?


’மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அருளினார் அல்லவா! இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதேபோல், பீஷ்மர், முள்படுக்கையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஏன் காத்திருந்தார்? எப்போது இறக்க வேண்டும் என்பதை எதனால் தீர்மானித்தார் என்றும் விளக்குகிறது புராணம்.

பாரதப் போர் நடைபெற்றது அல்லவா. பீஷ்மர், கௌரவர்களுடைய சேனைகளுக்கு தலைமை தாங்கி பத்து நாட்களாகப் போர் செய்தார். எவராலும் அவரை வீழ்த்தவே முடியவில்லை. உடனே அர்ஜூனன் ஒரு தந்திரம் செய்தான். பாண்டவர்கள் படையில் ஆண்மையிழந்த சிகண்டி என்ற வீரன் இருந்தான். அவனைப் பிடித்து, பீஷ்மரின் முன்னே போர்க்களத்தில் நிறுத்தினான். ’’ஆண்மையற்றவனோடு சண்டை போடுவது எனக்கு மிகப்பெரிய இழிவு’’ என நினைத்த பீஷ்மர், தன் ஆயுதங்களைக் கீழே போட்டார்.

அவ்வளவுதான். இதுதான் தருணம் என்று காத்துக்கொண்டிருந்த அர்ஜூனன், சிகண்டியின் பின்புறம் நின்று, அம்புகளைப் பொழிந்து, பீஷ்மரைச் சாய்த்தான் என்கிறது மகாபாரதம்.

உடலெங்கும் அம்புகள் தைத்த நிலையில் கீழே சாய்ந்த பீஷ்மர், கௌரவர்கள் படையிலும், பாண்டவர்கள் படையிலுமாக நின்ற தன் பேரன்கள் அனைவரையும் அழைத்தார். “நான் என் கடமையைச் செய்து முடித்து விட்டேன். இனி உயிர் பிழைக்க மாட்டேன். என் உடலில் தைத்துள்ள அம்புகளை நீக்கிவிட்டால் உடனே நான் இறந்து விடுவேன். இப்போது, தட்சிணாயன காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேவர்களின் இரவுக் காலமான இதில் இறப்பவர்களுக்கு நற்கதி கிடைக்காது. இன்னும் சில நாட்களில் தேவர்களின் உதயகாலமான (பகல் காலம்) உத்தராயனம் வந்து விடும்.அதுவரை நான் இறக்கக் கூடாது.

எனவே, இந்த அம்புகளோடு அமைதியான ஓரிடத்திற்கு என்னை எடுத்துச் செல்லுங்கள். அங்கு பகவானை நோக்கி இந்த முள்படுக்கையிலேயே இருந்தபடி தியானம் செய்து கொண்டிருக்கிறேன்’’ என்றார். அவர்களும் அப்படியே செய்தனர். அம்புப் படுக்கையிலேயே இருந்த பீஷ்மர், அந்த நாட்களில் பாண்டவர்களுக்கு, நல் உபதேசங்களைச் செய்து, பின் உத்தராயனம் வந்த நாளில் உயிர் நீத்தார் என்கிறது புராணம்.

அதனால், தேவர்களின் இரவு நேரமான ஆடி மாதம் தொடங்குகிற மாதத்தையும் மார்கழி மாதம் முடிகிற மாதத்தையும் குறிக்கிறது என்பதால் அந்த மாத தட்சிணாயன காலத்தை மக்கள் விரும்பவில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதனால்தான் ஆடி மாதத்திலும் மார்கழி மாதத்திலும், நல்ல காரியங்கள் எதையும் தொடங்காமல், அந்த மாதங்களை ஒதுக்கி வைத்தனர். திருமணம், காதுகுத்துதல், சடங்கு சாங்கியங்கள், நேர்த்திக்கடன்கள் என எதையும் மேற்கொள்ளாமல் இருந்தார்கள். தட்சிணாயனத்தின் கடைசி மாதமான மார்கழியில் புதுமனை புகுதல், மனை பூஜை செய்தல், அஸ்திவாரம் தோண்டுதல், கிணறு வெட்டுதல் முதலான செயல்களைச் செய்யாமல் தவிர்க்கச் சொன்னார்கள் ஆச்சார்யர்கள்.

மார்கழி மாதத்தின் மீது மக்களுக்கு இருக்கும் இந்த அச்சத்தைப் போக்க வேண்டும் என்பதற்காகத்தான், கண்ணபிரான் பகவத்கீதையில் “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’’ என்று அருளினார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். மார்கழி மாதத்தில் அதிக வெப்பம் இருக்காது. உடலுக்கு இதமாகவும், உள்ளம் ஒன்றி காரியங்களில் ஈடுபடவும் குளிர்ந்த மாதமாக, ஆழ்ந்த யோக நிலைக்குச் செல்லும் மாதமாகவும், குண்டலினி சக்தியை எழுப்புகிற ஆற்றல் நிறைந்த மாதமாகவும் சொல்லிவைத்தார்கள். தியானம், வழிபாடு முதலானவற்றில் கவனம் செலுத்துவதுமாக மார்கழி மாதம் போற்றிக் கொண்டாடப்படுகிறது.

உழுது பயிரிடுபவர்களுக்குக் கூட இந்த மார்கழி மாதம் முதிர்ந்த அறுவடைக்காலம் என்பார்கள். ஆண்கள் பஜனை செய்வதும், பெண்கள் பாவை நோன்பும் இருந்து மார்கழியை வழிபாட்டுக்கு உரிய மாதமாகக் கொண்டாடுகிறார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மார்கழி மாதத்தில், பூஜைகளிலும் பஜனைகளிலும் ஈடுபடுவோம். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின், மகாவிஷ்ணுவின் பேரருளைப் பெறுவோம்!

x