ஆத்தா மகமாயி: சமயபுரத்தாளே மாரியம்மா!


’பிள்ளைக்குத் தந்தை ஒருவன்; நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்’ என்று கவிஞர் கண்ணதாசன் எழுதினார். அதேபோல, நமக்கெல்லாம் அன்னையாகத் திகழ்பவள், தேவி. அம்மனுக்கு ஆயிரம் திருநாமங்கள் என்பார்கள். எத்தனை திருநாமங்கள் இருந்தாலும், அவளை சக்தி என்றும் அம்மன் என்றும் தேவி என்றும் மாரியம்மன் என்றும் மகமாயி என்றும் நம் விருப்பத்துக்கு ஏற்றார் போல் சொல்லி வணங்குகிறோம். அப்படித்தான் நமக்கெல்லாம் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள் அன்னை சமயபுரம் மாரியம்மா!

நாம் என்ன கேட்டாலும், எந்தச் சமயத்தில் கேட்டாலும் கேட்ட வரத்தைத் தந்திடும் மகமாயி. அதனால்தான், அவளை சமயபுரத்தாள் என்று அழைக்கிறோம். அவள் குடிகொண்டிருக்கும் ஊருக்கு சமயபுரம் என்றே பெயர் அமைந்தது.

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சாலையில், சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது சமயபுரம் திருத்தலம். கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், மகாகாளிபுரம், கண்ணபுரம் என சமயபுரம் தலத்துக்கு பல பெயர்கள் அமைந்திருக்கின்றன. ஆனால் அனைத்தையும் கடந்து, சமயபுரம் என்றால்தான் அகிலத்து மக்களுக்குத் தெரியும்!

சோழ மன்னன், தன் சகோதரியை கங்க தேசத்து மன்னனுக்கு மணம் முடித்துவைத்தான். அவர்களுக்குச் சீதனமாக கோட்டையையும் நகரம் ஒன்றையும் வழங்கினான். அந்த நகரம் கண்ணனூர் என அழைக்கப்பட்டது என்கிறது சமயபுரம் ஸ்தல புரானம். பிறகு, பல காலங்களுக்குப் பின்னர், பாண்டிய மன்னர்கள் படையெடுத்தார்கள். அப்போது கோட்டையையும் அழித்தார்கள்; நகரத்தையும் ஒழித்தார்கள். நகரம் அழிந்து பொட்டல் காடு போல் ஆனது. சில வருடங்கள் கழித்து, வெட்டவெளிக் காட்டில், வேப்பமரங்கள் வளர்ந்தன. வேம்புவனமாகவே உருமாறியிருந்தது.

இந்தக் காலகட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவி எனும் பெயரில் கோயில் கொண்டிருந்தாள் தேவி. கோரைப்பற்களும் செக்கச்சிவந்த கண்களுமாக திகழ்ந்தாள் என்பதால், அப்போதைய ஜீயர் சுவாமிகள், வைஷ்ணவி அம்மனை வேறொரு இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்தார்.

அதன்படி வைஷ்ணவியின் திருவுருவ மேனியை சுமந்தபடி வடக்கு நோக்கிப் பயணித்தாராம். வழியில் ஓரிடத்தில் எல்லோரும் இளைப்பாறினார்கள். பின்னர் கண்ணனூர் அரண்மனை இருந்த மேட்டுப் பகுதியை அடைந்தனர். அங்கே ஓலைக்கொட்டகையில் அம்மனை வைத்துச் சென்றனர். வைஷ்ணவி அன்று முதல் கண்ணனூர் அம்மன் என்று அழைக்கப்படலானாள். போற்றி வணங்கப்படலானாள் என்கிறது ஸ்தல புராணம்!

வைஷ்ணவி என்றும் கண்ணனூர் அம்மன், கண்ணனூர் மாரியம்மன் என்றும் அழைக்கப்பட்டவள் பின்னர் சமயபுரத்தாள் என்றும் சமயபுரம் மாரியம்மன் என்றும் இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறாள்.

கண்ணனூரில் அம்மனாக இருந்த சமயத்தில், தென்னகத்தின் மீது விஜயநகர மன்னர் படையெடுத்தார். தன் படை பரிவாரங்களுடன் கண்ணனூர் வேம்பு வனத்தில் தங்கினார். அங்கே இருந்த அம்மனைக் கண்டதும் சிலிர்த்துப் போய் மன்னரும் அவருடன் வந்தவர்களும் நமஸ்கரித்தார்கள். மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டார்கள். ’’யுத்தத்தில் வெற்றி பெற்றால், உனக்கு கோயிலே கட்டுகிறேன்’’ என வேண்டிக்கொண்டார் மன்னர். அதன்படியே வெற்றி வாகை சூடினார். பிரார்த்தனை நிறைவேறியதன் பலனாக, நேர்த்திக்கடனாக கோயிலையே எழுப்பினார். அம்மனை பிரதிஷ்டை செய்து கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்தார். காலப்போக்கில், பரிவார தெய்வங்களாக விநாயகப் பெருமானையும் கருப்பண்ணரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள் பக்தர்கள்.

.

இன்றைக்கு இருக்கிற சமயபுரம் திருக்கோயில், கி.பி.1804ல் விஜயரங்க சொக்கநாத மன்னரால் கட்டப்பட்டது. அதேசமயம், சோழப் பேரரசு காலத்திலேயே இந்தக் கோயில் இருந்திருக்க வேண்டும் என்றும் விஜய நகர மன்னர்களாலும் நாயக்க மன்னர்களாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்று தொடங்கி இன்றளவும் தன் சக்தியையும் சாந்நித்தியத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறாள் மகமாயி.

திருச்சியின் எல்லை தெய்வமாகவும் காவல்தெய்வமாகவும் திகழ்கிறாள். சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாக காஞ்சி காமாட்சி இருந்து நம்மையெல்லாம் காப்பது போல, உலகத்து மாரியம்மன்களின் தலைவியாக ஆட்சி செய்து அகிலத்தையே காத்தருள்கிறாள் சமயபுரத்தாள்!

நமக்கு என்ன குறைகள் இருந்தாலும் துக்கங்கள் இருந்தாலும் ஆத்தா மகமாயியிடம் சொல்லி கண்ணீர் மல்க வேதனைகளை அவளிடம் சமர்ப்பித்துவிட்டால் போதும்... மொத்தத் துக்கத்தையும் போக்கியருளுவாள். மொத்த வாழ்க்கையையும் இனிதாக்கித் தருவாள் சமயபுரத்தாள்!

x