கார்த்திகைச் சிறப்பு : ஆறு தீபங்களேற்றி, ஆறு வார வழிபாடு!


சிவன்மலை முருகனுக்கு ஆறு நெய் தீபங்களேற்றி, ஆறு வகைப் பழங்களால் நைவேத்தியம் செய்து, ஆறு வகைப் பூக்களால் அர்ச்சித்து, கார்த்திகை தீபத் திருநாளில் இருந்து ஆறு வாரங்கள் தொடர்ந்து ஆறுமுகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவில் திருமணம் நடந்தேறும்; மனம் போல் மாங்கல்யம் கிடைப்பது உறுதி என்கிறது ஸ்தல புராணம்!

சிவன்மலை ஸ்ரீசுப்ரமணியர் கோயில்

அழகிய மலையில் சிவனின் மைந்தன் குடிகொண்டிருக்கிறார். அதனால் அந்த மலையையே சிவன் மலை என்று அழைக்கிறது ஸ்தல புராணம். காங்கேயத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது சிவன்மலை. இங்கே அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சிவபெருமானின் மைந்தனான சுப்ரமணிய சுவாமி. இங்கே, வள்ளி-தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

ஆஞ்சநேயப் பெருமான், இந்தத் தலத்துக்கு வந்து முருகக் கடவுளை வணங்கிச் சென்றதாகத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். சிவவாக்கியர் எனும் சித்தர் பெருமான், இங்கு நெடுங்காலம் தங்கியிருந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார் என்பதால், இந்த மலை சிவன்மலை என்றே அழைக்கப்படுகிறது.

இந்தக் கோயிலில், உத்தரவுப் பெட்டி இருப்பது வேறெங்கும் இல்லாத அதிசயம். இந்த உத்தரவுப் பெட்டியில் கோரிக்கை மனுக்களை முருகப்பெருமானுக்கு சமர்ப்பித்து உத்தரவு கேட்கிற சம்பிரதாயம் பன்னெடுங்காலமாகவே உள்ளது.

தந்தையின் பெயரில் மலை அழைக்கப்பட்டாலும்... இங்கு மலை மீது குமரனே கோயில் கொண்டுள்ளார். பங்குனி மாதத்தில் உத்திரம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல், தைப்பூச விழா, வைகாசி விசாகப் பெருவிழா, கந்த சஷ்டி விழா என பலவும் விமரிசையாக நடைபெறுகின்றன.

கார்த்திகேயன் இங்கே ஸ்ரீசுப்ரமணிய சுவாமியாகக் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு கார்த்திகை மாதத்தில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிவன் மலையே விளக்குகளால் ஜொலிப்பதைக் காண கண் கோடி வேண்டும்.

கார்த்திகைக்கு முதல் நாள் பரணி தீபமும், திருக்கார்த்திகை நாளில் கார்த்திகை தீபமும், 3-ம் நாளில் ரோகிணி தீபமும் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்த மூன்று நாட்களும், முருகக்கடவுளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து விசேஷ அலங்காரங்களில் தரிசனம் தருகிறார் முருகப் பெருமான்.

கார்த்திகை மற்றும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வணங்கி, வழிபட்டால் சகல தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்; அனைத்துத் தடைகளும் நீங்கும் என்பது ஐதீகம்!

திருக்கார்த்திகை தீபத் திருநாளில், கார்த்திகேயக் கடவுளை வணங்கி வழிபட்டால், திருமண பாக்கியம் கிடைக்கும்; அழகன் முருகனைப் போல நமக்கு ஒரு குழந்தை பிறக்காதா என்று ஏங்கிக் கலங்குவோர், ஆறு நெய் தீபங்களேற்றி, ஆறு வகைப் பழங்களால் நைவேத்தியம் செய்து, ஆறு வகைப் பூக்களால் அர்ச்சித்து, கார்த்திகை தீபத் திருநாளில் இருந்து ஆறு வாரங்கள் தொடர்ந்து ஆறுமுகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவில் திருமணம் நடந்தேறும்; மனம் போல் மாங்கல்யம் கிடைப்பது உறுதி என்கிறார்கள் முருக பக்தர்கள்!

x