அழகன் முருகனுக்கு பன்னிரு கரங்கள் எதற்காக?


அழகன் முருகனை அனுதினமும் வேண்டுவோம். நம் அல்லல்களையெல்லாம் போக்கியருளுவான் கந்தகுமாரன்.

கடவுளரில், தமிழ்க்கடவுள் எனும் பெருமைக்கு உரிய தெய்வம் முருகப்பெருமான். பொதுவாகவே, ஒரு தெய்வத்துக்கு பல திருநாமங்கள் இருக்கின்றன. அதேபோல, கந்தன், குமரன், பாலகுமாரன், செந்திலாண்டவர், சுப்ரமணியர், சண்முகர் என முருகனுக்கு பல திருநாமங்கள் உள்ளன.

இவை மட்டுமா?

விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன் என்று முருகப்பெருமானைச் சொல்வார்கள். அதேபோல், அக்கினியில் இருந்து தோன்றியதால் அக்னி புத்திரன் என்றும் முருகனை அழைக்கிறது புராணம்.

கங்கை தன் கரங்களால் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பிழம்பின் கருவில் தோன்றியவன் என்பதால், காங்கேயன் என்கிற திருநாமமும் கந்தப்பெருமானுக்கு உண்டு. சரவணப் பொய்கையில் உதித்தவன் என்பதால் சரவணன் என்றும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும் திருநாமங்கள் உள்ளன.

தாமரை மலரின் கந்தகத்தில் இருந்து உதித்தவர் என்பதால், கந்தன் என்றும் ஆறுமுகங்களைக் கொண்டவன் என்பதால் ஆறுமுகன் என்றும் சொல்கிறது புராணம். ஆறுமுகங்களையும் ஒன்றாக அன்னை பராசக்தியானவள் இணைத்து ஒருமுகமாக மாற்றி அருளியதால் சண்முகம் என்றும் விவரிக்கிறது புராணம்.

முருகப்பெருமானுக்கு பன்னிரெண்டு திருக்கரங்கள் உண்டு. இரண்டு கரங்கள், தேவர் பெருமக்களையும் முனிவர் பெருமக்களையும் காக்கின்றன என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள். மூன்றாவது கரம், அங்குசத்தைச் செலுத்தி நம்மை அரவணைக்கிறது. நான்காவது திருக்கரம், முருகப்பெருமானில் தொடையில் ஒய்யாரத்துடன் அமைந்திருக்கிறது.

ஐந்து மற்றும் ஆறாவது திருக்கரங்கள், வேல் சுழற்றும் பணியைச் செய்கின்றன. ஏழாவது திருக்கரம், யோகமும் ஞானமும் தேடுவோருக்கு அருளைத் தந்தருளி அபயமளிக்கிறது. எட்டாவது திருக்கரம், தன் திருமார்பில் உள்ள மாலையோடு திகழ்கிறது.

முருகப்பெருமானின் ஒன்பதாவது திருக்கரம், கை வளைகளோடு சுழன்று பக்தர்கள் செய்கிற யாகங்களையும் வேள்விகளையும் ஏற்றுக் காத்தருள்கிறது. பத்தாவது திருக்கரம், ’அபயம் தந்தேன். எதிர்ப்புகளை ஒழித்தேன்’ என்று மணியை ஒலித்து நமக்கு பறைசாற்றுகிறது. பதினோராவது திருக்கரம், காடும் கரையும் நிறைந்திருக்கும் வகையில் மழையை அருள்கிறது. பன்னிரெண்டாவது திருக்கரம், சகல தோஷங்களையும் நீக்கியருளி, நம் வாழ்வில் திருமண யோகத்தையும் வீடு பேறு சுகத்தையும் தந்தருள்கிறது.

பன்னிரு கரங்கள் கொண்டவனை, ஆறுமுகத்தானை, அழகன் முருகனை அனுதினமும் அவன் திருநாமம் சொல்லி வழிபடுவோம். முருகக் கடவுளுக்கு உகந்த நாட்களில், அருகில் முருகக் கடவுள் குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்குச் சென்று மனதார பிரார்த்தனை செய்வோம். மங்காத புகழையும் செல்வத்தையும் தந்தருளிக் காப்பான் கந்தகுமாரன்!

x