கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி!


கார்த்திகை மாத சிவராத்திரியை கவலைகளையெல்லாம் போக்கக்கூடிய சிவராத்திரி என்றே சொல்லுவார்கள். இன்று நவம்பர் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமையில் வரும் கார்த்திகை சிவராத்திரியை சிவ தரிசனம் செய்து வழிபடுவோம். நம் கவலைகளையெல்லாம் போக்கியருளுவார் தென்னாடுடைய சிவனார்.

சிவராத்திரி விரதம் என்பது ஐந்து வகையானவை. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்சம் என்று சொல்லப்படுகிற தேய்பிறை காலத்தில் சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி நன்னாள் என போற்றப்படுகிறது. சிவ வழிபாடு செய்பவர்கள், மாதந்தோறும் வருகிற சிவராத்திரியில், மறக்காமல் விரதம் மேற்கொள்கின்றனர். சிவாலயங்களுக்குச் சென்று, தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

முதல் நாள் இரவிலிருந்தே விரதம் தொடங்குபவர்களும் உண்டு. அதேபோல், விரத நாளின் காலையில் இருந்தே உணவு உட்கொள்ளாமல் விரதம் மேற்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகள், வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்கள், விரதம் இருந்து உடம்பைச் சிரமப்படுத்திக் கொள்ளவேண்டும் எனும் அவசியமில்லை என ஆச்சார்யர்கள் வலியுறுத்துகின்றனர்.

சிவராத்திரியன்று காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து சிவ புராணம் பாராயணம் செய்யலாம். நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்தபடி இருக்கலாம். அடுத்தநாள் காலையில் நீராடிவிட்டு, சிவ தரிசனம் செய்து, பிறகு உணவு எடுத்துக்கொள்ளலாம்.

சிவாலயங்களில் சிவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அபிஷேகத்துக்குத் தேவையான, நம்மால் முடிந்த பொருட்களை வழங்கி, அபிஷேகத்தை கண்ணாரத் தரிசிப்பது மிகப்பெரிய புண்ணியம்.

உலகப் பிரளயத்தின்போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணை கொண்ட பராசக்தியானவள், அண்டங்கள் தோன்றவும் இயங்கவும் சிவனாரை தியானித்தாள். தவத்தின் பலனாக, தன்னுள் ஒடுங்கியிருந்த உலகங்களை மீண்டும் உண்டாக்கி அருளியதுடன் உயிர்களையும் படைத்து அருளினார் ஈசன். அப்படி பார்வதிதேவி விரதம் மேற்கொண்டது தான் சிவராத்திரி விரதம் என்று இன்றைக்கும் போற்றப்படுகிறது.

உமையவள் அப்போது சிவபெருமானிடம், “இந்த சிவராத்திரி விரதத்தை மேற்கொள்வோருக்கு எல்லா நலன்களும் கிடைக்கவேண்டும்; அவர்கள் முக்தி அடைய வழி செய்யவேண்டும்; அவர்களின் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கியருளவேண்டும்” என வேண்டிக் கேட்டுக்கொண்டாள். அதை ஏற்ற சிவனார், இன்றளவும் சிவராத்திரி விரதம் மேற்கொள்வோருக்கு இன்னல்களையெல்லாம் விரட்டி அருளுகிறார் என்றும் அவர்களுக்கு முக்திப்பேறு அளித்துக் காக்கிறார் என்றும் தெரிவிக்கிறது சிவபுராணம்.

கார்த்திகை மாத சிவராத்திரியான இந்த நாளில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று, நந்தீஸ்வரரையும் நமக்கெல்லாம் இப்படியொரு விரதத்தையும் விரத பலன்களையும் வழங்கக் காரணமாக இருந்த அம்பாளையும் சிவபெருமானையும் மனதார வேண்டிக்கொள்வோம். எல்லாக் கவலைகளில் இருந்தும் நம்மைக் காத்தருளுவார் சிவபெருமான்!

x