சுபிட்சம் தரும் சுதர்சன காயத்ரி: சக்கரத்தாழ்வாருக்கு சர்க்கரைப் பொங்கல்!


பெருமாள் சங்கு சக்கரதாரியாக காட்சி தருகிறார் என்கிறோம். சக்கரம் என்பதை சுதர்சனம் என்றும் சொல்கிறோம். சுதர்சனம் என்பவர், சக்கரத்தாரியாக, சக்கரத்தாழ்வாராகவே திருமாலின் திருக்கரங்களில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

அதனால்தான் பெருமாள் கோயில்களில், சக்கரம் என்கிற சுதர்சனர் என்கிற சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சந்நிதியே அமைந்திருக்கிறது. வைஷ்ணவ ஆலயங்களில், மூலவரான பெருமாளுக்கென பக்தர்கள் கூட்டம் இருப்பது போலவே, சக்கரத்தாழ்வாருக்கென தனி பக்தர்களும் இருக்கிறார்கள். திருச்சி ஸ்ரீரங்கம் திருத்தலத்தில், மிகப்பெரிய சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது. இந்த சக்கரத்தாழ்வாரை, தினமும் தரிசிக்கிற ஸ்ரீரங்கத்து அன்பர்கள் இருக்கிறார்கள். சனிக்கிழமை தோறும் வந்து சக்கரத்தாழ்வாரை தரிசிப்பதற்காகவே, திருச்சியில் இருந்தும் திருச்சியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வாரம் தவறாமல் வருகிற பக்தர்கள்.

பெருமாளின் சக்கரம் அத்தனை வலிமைமிக்கது. மகாசக்தியுடன் திகழக்கூடியது என்கிறது விஷ்ணு புராணம். மேலும், தசாவதாரங்களில் உள்ள வராக மூர்த்தியின் அருங்குணங்களும் நரசிம்மரின் மூர்க்க குணங்களும் ஒருங்கே கொண்டவர் சக்கரத்தாழ்வார் என விவரிக்கிறது புராணம்.

கோபத்துக்கும் கர்வத்துக்கும் பெயர் பெற்ற துர்வாச முனிவருக்கு புத்தி புகட்ட, மகாவிஷ்ணு தன் சக்கரத்தை ஏவினார் என்றும் தீமை செய்பவர்களை அழிக்கும் ஆற்றல் பெற்றவர் சக்கரத்தாழ்வார் என்றும் ஆச்சார்யர்கள் விவரிக்கின்றனர்.

மதுரைக்கு அருகே உள்ளது திருமோகூர் திருத்தலம். இந்தத் தலத்தின் பெருமாள் திருநாமம் ஸ்ரீகாளமேகப் பெருமாள். இங்கே உள்ள சக்கரத்தாழ்வார் ரொம்பவே விசேஷமானவர். சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், இங்கே சக்கரத்தாழ்வாரைத் தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

நம்மைப் போன்ற மானிடர்களுக்கு இருக்கும் பயங்களையெல்லாம் போக்கவல்லவர் சக்கரத்தாழ்வார். அதேபோல், மானிடர்களுக்கு துன்பங்களைக் கொடுக்கும் துர்குணம் கொண்டவர்களை அறவே அழித்துவிடுவார் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஓம் சுதர்சனாய வித்மஹே

மஹாஸ்வாலாய தீமஹி

தந்நோ சக்ர ப்ரசோதயாத் என்பது ஸ்ரீசுதர்சன காயத்ரி மந்திரம்.

சக்கரத்தாழ்வார், நம் எதிரிகளை அழித்து, நமக்கு இருக்கிற தடைகளை நீக்கக்கூடியவர். நாம் செயலாற்றுகிற காரியங்களில் இருக்கிற தடைகளையெல்லாம் தகர்த்து அருளுபவர். நம் வீட்டுக்கும் வீட்டார் அனைவருக்கும் உள்ள திருஷ்டியைப் போக்கி நம்மை காபந்து செய்து அருளக்கூடியவர். ஸ்ரீசுதர்சன காயத்ரியை தினமும் 11 முறை சொல்லி வழிபட்டு வருவது வாழ்வில் நம்மை நல்ல நிலைக்கு உயர்த்தும். ஞானத்தைத் தந்தருளுவார் சக்கரத்தாழ்வார்.

சனிக்கிழமைகளில், சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு முன்னே அமர்ந்து, ஸ்ரீசுதர்சன காயத்ரியைச் சொல்லி வழிபடலாம். முடிந்தால் 108 முறை சொல்லி வழிபடுவது வளமும் நலமும் தரும். வீட்டில் இருந்தும் சக்கரத்தாழ்வாரை நினைத்து வழிபடலாம். அத்துடன் சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி முதலான இனிப்பு ஏதேனும் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள். திருமணத் தடைகள் அகலும். மங்கல காரியங்கள் அனைத்தையும் அருளிச்செய்வார் ஸ்ரீசுதர்சனர். சுபிட்சத்தை அள்ளிக் கொடுப்பார் என்கிறார் அனந்தராம பட்டாச்சார்யர்!

x