சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மொஹரம் பண்டிகையையொட்டி நடைபெற்ற பூமிதி திருவிழாவில் ஏராளமான இந்துக்கள் விரதமிருந்து தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வாராப்பூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அதில் 20-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் குடும்பங்களும் உள்ளனர். இங்குள்ள அஸ்ஸனா, உஸ்ஸனா பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலில் 300 ஆண்டுகளாக இஸ்லாமியர்களுடன் இணைந்து இந்துக்களும் மதநல்லிணக்கத்துடன் மொஹரம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி கடந்த வாரம் இங்கு கொடியேற்றத்துடன் மொஹரம் பண்டிகை விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் விரதம் இருந்தனர். விழா நாட்களில் தினமும் இரவில் பெண்கள் கும்மி கொட்டினர். இன்று அதிகாலை பூமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பள்ளிவாசல் முன்பாக 3 அடி பள்ளம் வெட்டி, 100 டன் விறகுகளை எரித்து பூக்குழி அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் குலவையிட ஆண்கள் பூக்குழியில் இறங்கினர்.
பூக்குழி இறங்கிய இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் திருநீறு வழங்கி, பூக்குழியில் தீர்த்தம் தெளித்தனர். தொடர்ந்து பூ மெழுகுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருமணத்தடை, நோய்கள் தீர்க்கவும் குழந்தை வரம் கிட்டவும் பெண்களின் தலையில் துணியை போர்த்தி தீ கங்குகளை அதில் கொட்டி, சற்று நேரத்தில் அதை கீழே தள்ளி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர், அஸ்ஸனா, உஸ்ஸனா பாத்திமா நாச்சியாரின் உருவம் வைக்கப்பட்ட மின்னொளி அலங்கார சப்பர ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வந்தது. இதில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் திரளாக கலந்து கொண்டனர்.