சங்கர மடத்தின் சார்பில் ராமேஸ்வரத்தில் விரைவில் கல்விப் பணி: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தகவல்


ராமேஸ்வரம்: காஞ்சி சங்கர மடத்தின் சார்பாக ராமேஸ்வரத்தில் விரைவில் கல்விப் பணி துவங்கப்படும் என காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நடப்பு ஆண்டுக்கான வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதத்தை வரும் ஜுலை 21-ல் துவக்கி, செப்டம்பர் மாதம் 18-ம் தேதி வரை, ஓரிக்கை, மஹா பெரியவர் மணிமண்டபத்தில் கடைப்பிடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்தார். அவருக்கு மடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு மேல் ராமேஸ்வரம் கோயில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்வதற்காக அவர் வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ராமநாதசுவாமி கோயில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் கருவறைகளில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் செய்து வழிபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், “மக்களுக்கு நல்ல தீர்வுகளை அளிக்கக்கூடிய ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி திருக்கோயில் அமைந்திருக்கிறது. குளம், ஆறு இவற்றை எல்லாம் நாம் தீர்த்தமாக கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால், இந்த ராமேஸ்வரத்தை பொறுத்தவற்றிலும் அக்னி தீர்த்தம் என்ற பெயரில் கடலே தீர்த்தமாக அமைந்திருக்கிறது.

பலரும், பல தேசத்து மக்களும் இங்கு பக்தியுடன் வந்து இறைவனை வழிபட்டு நல்ல பலன்களை பெறுகிறார்கள். காஞ்சி மகா பெரியவர் 1920-களிலே தேச நன்மைக்காக மகாத்மா காந்தியடிகளின் அஹிம்சா முறையை பின்பற்றி பட்டு ஆடைகளை துறந்து காதி வஸ்திரங்களை ராமேஸ்வரம் கோயில் வந்து உடுத்தினார்கள்.

அதன் பிறகு பலமுறை ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்துள்ளார்கள். பல நல்ல பணிகளை செய்துள்ள ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளும் பலமுறை ராமநாதசுவாமி கோயிலில் அபிஷேகம் செய்திருக்கிறார்கள்.

அவர்களின் வழித்தொட்டு இன்று ஏகாதச ருத்ராபிஷேகம், கங்கா சஹஸ்ரநாம பூஜையும் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. காஞ்சி சங்கர மடத்தின் சார்பாக விரைவில் ராமேஸ்வரத்தில் கல்வி பணி துவங்கப்படும்” என தெரிவித்தார்.

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ராமநாதசுவாமி கோயில் வருகையையொட்டி ராமநாதசுவாமி கோயிலில் சுமார் ஒன்றரை மணி நேரம் பக்தர்களுக்கான சாமி தரிசனம் நிறுத்தப்பட்டது. மேலும், இரண்டு டிஎஸ்பி-க்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

x