உலக நன்மைக்காக 3500 கி.மீ. சாஷ்டாங்க நமஸ்கார யாத்திரை: உத்தராகண்டிலிருந்து ராமேஸ்வரம் வந்தடைந்த சாது!


ராமேஸ்வரம்: ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஒன்றரை ஆண்டுகளாக சாலைகளில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தவாறு உத்தராகண்ட் மாநிலத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கு சாது ஒருவர் இன்று வந்தடைந்தார்.

சாஸ்டாங்க நமஸ்காரம் என்பது இந்து சமய வழிபாட்டில் ஆண்களுக்கு உரித்தான இறை வணக்கமாகும். இம்முறைப்படி ஆணின் எட்டு உடற்பாகங்களும் தரையில் படும்படியாக இறைவனை வணங்க வேண்டும். எட்டு அங்கங்கள் என்பது மார்பு, தலை, கைகள், கால்கள், முழங்கால்கள், உடல், மனம் மற்றும் பேச்சைக் குறிக்கும். இந்த சாஸ்டாங்க நமஸ்காரம் செய்யும் ஒருவர் அனைத்துப் பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கப்படுகிறார் என்பது சாதுக்களின் நம்பிக்கையாகும்.

அப்படித்தான் ராஜஸ்தான் மாநிலம், கரோலி மாவட்டம், கூடலாபாடியைச் சேர்ந்த ராஜகிரி மகராஜ் (60) என்ற சாது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபடியே ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு யாத்திரை தொடங்கி இருக்கிறார். சாலை வழியாக யாத்திரை வந்த இவருக்கான உணவுத் தேவைகளை கவனிப்பதற்காக மற்ற இரண்டு சாதுக்கள் சைக்கிளில் பயணம் செய்தனர்.

இப்படி கடந்த 18 மாதங்களாக சுமார் 3,500 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை பல்வேறு மாநில சாலைகளில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தவாறே கடந்து வெயில், மழை, பனி என அனைத்து வகையான வானிலையையும் தாண்டி ராமேஸ்வரம் வந்து சேர்ந்துள்ளார் ராஜகிரி மகராஜ். சாது ராஜகிரி மகராஜ் சாலையில் சாஸ்டாங்க நமஸ்காரம் செய்வதற்காக தெர்மகோலில் நைலான் சாக்கை போர்வை போல் சுற்றி ஒரு பலகை போல் செய்துள்ளார்.

அந்த தெர்மகோல் பலகையை சாலையில் கிடத்தி அதன் மீது சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தவாறு நகர்ந்து வந்துள்ளார். இது குறித்து நம்மிடம் பேசிய சாது ராஜகிரி மகராஜ், “உலக நன்மைக்காக இந்த சாஷ்டாங்க நமஸ்கார யாத்திரையை கடந்த ஆண்டு உத்தராகண்ட் மாநிலம் கங்கோத்ரியிலிருந்து துவங்கினோம். வழியில் பல்வேறு கோயில்களுக்கு சென்று விட்டு ராமேஸ்வரம் வந்திருக்கின்றோம்.

தினமும் அதிகாலையில் சாஷ்டாங்க நமஸ்கார யாத்திரையை துவங்குவேன். ஒரு நாள் சராசரியாக 5 கி.மீ தூரத்திலிருந்து 10 கி.மீ வரையிலும் சாலையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தவாறே யாத்திரை செய்வேன். இரண்டு சாதுக்கள் என்னை சைக்கிளில் பின் தொடர்ந்து வருவார்கள். வழியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வோம்.

இரவில் சாலையோரமாக உள்ள கோயில்களில் ஓய்வெடுத்துக் கொள்வோம். நாளை (புதன்கிழமை) அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து யாத்திரையை முடித்துக்கொண்டு மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வாகனம் மூலம் திரும்பத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

x