திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2 ஆண்டுகளுக்குப் பின்பு பக்தர்கள் அனுமதியோடு சூரசம்ஹார நிகழ்வு இன்று நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சூரசம்ஹார நிகழ்வைக் கண்டுகளித்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். நிகழாண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 25-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

6-ம் நாள் விழாவான இன்று இந்நிகழ்வின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக இதையொட்டி திருச்செந்தூர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கூடாரங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டனர்.

கரோனா காலக்கட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியின்றியே சூரசம்ஹார விழா நடந்தது. இந்நிலையில் நிகழாண்டில் கட்டுப்பாடு இல்லாததால் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்வைக் கண்டு தரிசித்தனர்.

சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கே திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம் ஆகியவை நடந்தன. நண்பகல் சாயராட்சை தீபாரதனை நடந்தது. தொடர்ந்து மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எருந்திருளினார். திருச்செந்தூர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ‘வெற்றிவேல்... வீரவேல்’ என விண்ணதிர கோஷங்கள் எழுப்பினர்.

சூரசம்ஹார நிகழ்வின் பாதுகாப்புப் பணியில் 2,700 போலீஸார் ஈடுபட்டனர். சூரசம்ஹார நிகழ்வு முடிந்த பின்னர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடந்தது.

x