வன பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் கண் திறப்பு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு!


பிரசித்தி பெற்ற கோவை மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் திருக்குண்டம் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு இன்று குண்டம் கண் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, தேக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வன பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கோவையில் இருந்து மட்டுமின்றி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா இக்கோயிலில் வெகுவிமர்சியாக கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டு 31-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா இம்மாதம் 23-ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது. அதையொட்டி, குண்டம் கண் திறக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

வன பத்ரகாளியம்மனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில், சிறப்பு அலங்காரமும், அபிஷேக பூஜைகளும் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தக்காரும், துணை ஆணையருமான மேனகா, கோயில் செயல் அலுவலர் கைலாசமூர்த்தி ஆகியோர் மண்வெட்டியால் குண்டம் கண் திறந்து வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பூச்சாட்டுதலைத் தொடர்ந்து, வரும் 26-ம் தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனையும், 27-ம் தேதி இரவு 10 மணிக்கு கிராம சாந்தியும், 28-ம் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. அன்றைய தினம் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறும். 29-ம் தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா வரும் 30-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்புடன் தொடங்குகிறது. காலை 6 மணிக்கு பக்தர்கள் திருக்குண்டம் இறங்குதல் நடைபெற உள்ளது. 31-ம் தேதி காலை 10 மணிக்கு மாவிளக்கு வைக்கும் வைபவமும், மாலை 6 மணிக்கு பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.

x