இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் என்றைக்கு ஆரம்பிப்பது ! விரதத்தை தொடங்க வேண்டிய நாள் குறித்து நிறையபேருக்குக் குழப்பம் இருக்கிறது.
ஐப்பசி அமாவாசையான இன்று அக்டோபர் 25-ம் தேதி சூரியகிரகணம். கந்த சஷ்டிக்கான விரத நன்னாள் தொடக்கம். எனவே, கிரகண காலத்தில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கலாமா கூடாதா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. விரதத்தை எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பம் இருந்து வருகிறது. அதில் இந்த கந்த சஷ்டி விரதத்தை எந்த நாளில் தொடங்கி, எந்தநாளில் முடிப்பது என்ற சந்தேகமும் பலருக்கு உண்டு.
இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் அக்டோபர் 25-ம் தேதியான இன்றைக்குத் (செவ்வாய்க்கிழமை) தான் தொடங்குகிறது. இன்று அமாவாசை திதியும் உள்ளது. அதேசமயம் இன்று மாலை 6.00 மணிக்கு மேல், பிரதமை திதி பிறந்து விடுகிறது. ஆகவே, எந்தச் சந்தேகமும் இல்லாமல் நீங்கள் இன்றே சஷ்டி விரதத்தைத் தொடங்கலாம்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், திருச்செந்தூரில் அக்டோபர் 30-ம் தேதி தான் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. ஆகவே, அந்த நாளிலிருந்து ஆறு நாட்கள் பின்னால் கணக்கு வைத்துப் பார்த்தால், இன்று விரதத்தை தொடங்குவதே சரியான நாளாக இருக்கும். இன்றையதினம் அமாவாசை விரதம் இருக்கிறது. கேதார கௌரி விரதம் இருக்கிறது. கிரகணமும் இருக்கிறது. இதில் இந்த கந்த சஷ்டி விரதத்தை நாம் எந்த நேரத்தில் ஆரம்பிப்பது?
இன்று காலை 11:30 மணிக்குள் அமாவாசை விரதத்தை நிறைவு செய்துகொள்ளலாம். அதேபோல், கேதார கௌரி விரதத்தையும் நிறைவு செய்துகொள்ள வேண்டும். பின்பு கிரகண நேரம் தொடங்கி விடுகிறது. கிரகணம் முடிந்த பின்பு மாலை 6:30 மணிக்கு மேல், கந்த சஷ்டி விரதத்தைத் தொடங்க வேண்டும். விரதத்தை தொடங்குபவர்கள் தலைக்கு குளித்து முடித்துவிட்டு, அதன் பின்பு பூஜை அறையை எல்லாம் சுத்தம் செய்து, வீட்டை சுத்தம் செய்து, மாலை 7.30 மணிக்கு மேல் முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு முன்பு நெய் அகல் விளக்கு ஏற்றி வைத்து, உங்களுடைய சஷ்டி விரதத்தைத் தொடங்கலாம்.
சஷ்டி விரதம் என்பது தொடர்ந்து 6 நாட்கள் இருக்கக்கூடிய விரதம். 7-வது நாள் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து ஆறு நாட்கள் விரதத்தை இருக்க முடியாதவர்கள், முருகப்பெருமானின் திருக்கல்யாணம் நடைபெறக் கூடிய ஏழாவது நாளில் மட்டும் ஒரேயொரு நாள் மட்டும் விரதம் மேற்கொள்ளலாம்.
குறிப்பாக, குழந்தை வரம் வேண்டி இருப்பவர்கள் இந்த விரதத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். முடிந்தால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சஷ்டிவிரதத்தை அனுஷ்டிக்கலாம். முடியாதவர்கள் அவரவர் குடும்பச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விரதத்தை கடைப்பிடிக்கலாம். மனைவி மட்டும் விரதம் இருந்தாலும் தவறு இல்லை. கணவர் மட்டும் விரதம் இருந்தாலும் தவறு இல்லை என்கிறது கந்தபுராணம்.
தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு, முருகப்பெருமானுக்கு விளக்கு ஏற்றி வைத்து விரதத்தைத் தொடங்க வேண்டும். காலையிலேயே கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். அப்படி இல்லை என்றால் கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்கவிட்டுக் கேட்கலாம். மேலும், முருகப்பெருமானின் மூல மந்திரத்தை ஆறுமுறை அல்லது 12 முறை அல்லது 21 முறை ஜபிக்கலாம்.
முருகப்பெருமானின் மூலமந்திரம்.
ஓம் ஸெளம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ
ஆறு நாட்களும் எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருப்பவர்களும் இருக்கலாம். அப்படி இல்லை வெறும் பழங்கள் மற்றும் பால் சாப்பிட்டும் விரதம் மேற்கொள்ளலாம். ஒருவேளை பலகாரம் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு விதிமுறைகளும் மந்திரங்களும் எப்படி முக்கியமோ, அதே அளவுக்கு பக்தியே முக்கியம். உண்மையான பக்தியோடு முருகக் கடவுளை வணங்கி வருவோம். முழுமையான பலனைத் தருவான் வேலவன்!