அருள்தரும் சக்தி பீடங்கள் - 46


அம்மனின் சக்தி பீட வரிசையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சந்தல் பர்கனா பிரிவுக்கு உட்பட்ட தேவ்கர் மாவட்டத்தில் தேவ்கர் நகரத்தில் அமைந்துள்ள வைத்தியநாத் கோயில் ஹர்த பீடமாக போற்றப்படுகிறது.

இத்தலத்தில் தேவி ஜெய் துர்கா என்றும் ஆரோக்யை என்றும் அழைக்கப்படுகிறார். சக்தி தேவியின் இதயப் பகுதி இங்கு விழுந்ததால் இந்த இடம் ஹர்த பீடமாக அழைக்கப்படுகிறது. பைரவர் வைத்தியநாதர் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒருவராக வணங்கப்படுகிறார்.

தல வரலாறு

இராவணன், இலங்கையைத் தவிர மூன்று உலகங்களையும் ஆட்சிபுரியும் சக்தியை கொண்டிருந்தான். தான் பெற்ற பல வரங்களின் உதவியால், யக்‌ஷர்கள், கந்தர்வர்கள், தேவர்கள், சிறு தெய்வங்கள் ஆகியோரை சிறைபிடித்து இலங்கையில் வைத்திருந்தான். மேலும், சிவபெருமான் கைலாயத்தைவிட்டு இலங்கையில் தங்க வேண்டும் என்று விருப்பம் கொண்டான்.

ஒருசமயம் ராவணன், இமயமலை சென்று, சாமகானம் பாடி, சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டான். அப்போது தனது தலைகளை ஒவ்வொன்றாக வெட்டி சிவலிங்கத்துக்கு சமர்ப்பித்தான். 9 தலைகளை கொடுத்த பிறகு, 10-வது தலையை வெட்ட முயற்சிக்கும்போது, சிவபெருமான் தோன்றி, ஒரு வரம் அளிப்பதாகக் கூறினார். உடனே ராவணன், அங்குள்ள காம்ன லிங்கத்தை, இலங்கைக்கு கொண்டு செல்ல வரம் அருளுமாறு சிவபெருமானிடம் கேட்டான்.

சிவபெருமானும் ஒரு நிபந்தனையைக் கூறி அதற்கு உடன்பட்டார். வழியில் எங்காவது சிவலிங்கத்தை வைத்துவிட்டால், தான் அங்கேயே தங்கிவிடுவதாக சிவபெருமான் கூறினார். சிவபெருமானின் அந்த நிபந்தனையை ஏற்று, ராவணன், காம்ன லிங்கத்தைத் தூக்கிக்கொண்டு, கைலாயத்தில் இருந்து புறப்பட்டான். சிவபெருமான் கைலாயத்தில் இருந்து வெளியேறியதைக் கேட்ட தேவர்கள் கவலை கொண்டனர். இது குறித்து அனைவரும் திருமாலிடம் கூறினர்.

தக்க நேரத்தில் செயல்படுவதாகக் கூறிய திருமால், வாயு தேவனை அழைத்து ராவணனின் வயிற்றுக்குள் புகுந்து உபாதைகள் அளிக்கப் பணித்தார். ராவணன் சிவலிங்கத்துடன் இலங்கையை நோக்கிப் பயணிக்கும்போது, தேவ்கர் பகுதியில் சற்று இளைப்பாற எண்ணினான். அப்போது அங்கிருந்த அஹிர் பைஜு என்ற வேடுவச் சிறுவனிடம் சிவலிங்கத்தைக் கொடுத்துவிட்டு, சிறிது நேரம் கீழே வைக்காமல் கையிலேயே வைத்துக் கொண்டிருக்குமாறு கூறிவிட்டு, சற்று ஓய்வெடுத்தான்.

நேரம் செல்லச் செல்ல சிவலிங்கத்தின் எடை அதிகரித்தது. சுமை தாங்காமல் அஹிர் பைஜு சிவலிங்கத்தை கீழே வைத்துவிட்டார். ராவணன் திரும்பி வந்தபோது சிவலிங்கம் கீழே வைக்கப்பட்டிருப்பதை அறிந்து வருந்தினான். தனது பலம் முழுவதையும் பயன்படுத்தி சிவலிங்கத்தைப் பெயர்க்க முயற்சித்தான். ஆனால், சிவலிங்கத்தை எடுக்க இயலவில்லை.

இது அனைத்தும் இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த ராவணன், அந்த இடத்திலேயே சிவகங்கை என்ற தீர்த்தக் குளம் அமைத்து சிவனை வழிபட்டான். (அருகே சந்திர கூப (கிணறு) தீர்த்தமும் உள்ளது). பின்னர் அந்த இடத்தைவிட்டு அகன்றான். (அஹிர் பைஜு என்பவர் திருமாலின் ரூபம் என்று கூறப்படுகிறது). ராவணனின் செயல்பாட்டை ஓரமாக இருந்து அஹிர் பைஜு கவனித்துக் கொண்டிருந்தார்.

ராவணன் அந்த இடத்தை விட்டுச் சென்றதும், தினமும் அஹிர் பைஜு சிவலிங்கத்தை வழிபட்டு வந்தார். ஒருநாள் இல்லத்தில் அவருக்கு பசி எடுத்தபோது, உணவு உண்ண அமர்ந்தார். அப்போதுதான் அன்று சிவபெருமானை (போலே பாபா) தரிசிக்கவில்லை என்ற நினைவு வந்தது. உடனே உணவு உண்ணாது, அவரை தரிசித்துவிட்டு வந்தார். மற்றொரு சமயம் சிவலிங்கத்தை ஒரு சிலர் தாக்க வந்தபோது, அஹிர் பைஜு அவர்களுடன் சண்டையிட்டு போலே பாபாவைக் காத்தார்.

அஹிர் பைஜுவின் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சி அளித்தார். மகாதேவனைக் கண்ட அஹிர் பைஜு, “ராவணன் தங்களை இலங்கை அழைத்துச் சென்றிருந்தால், உங்களைப் போற்றி கொண்டாடியிருப்பார்” என்றார். மனதால் தன்னை வழிபட்ட அஹிர் பைஜுவைப் பாராட்டிய சிவபெருமான், “இனி உன் பெயருடன் சேர்ந்து எனது பெயர் இருக்கும். இந்த இடம் ‘பாபா பைஜுநாத் தாம்’ என்று அழைக்கப்படும்” என்று கூறினார்.

அதன்பிறகு பிரம்மதேவர், திருமால், தேவர்கள் வந்திருந்து சிவபெருமானை வழிபட்டனர். அப்போது முதல் தேவ்கரில் காம்ன லிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். விரும்பிய பலனைத் தருவார் வைத்தியநாதர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ராவணன் காயப்பட்டபோது, வைத்தியராக வந்து அவனைக் காத்ததால் சிவபெருமான் ‘வைத்யா’ என்று அழைக்கப்படு வதாகவும் கூறப்படுகிறது.

திரிபுர சுந்தரி

பார்வதி தேவியின் ரூபமான ஜகன்மாதா இங்கு இரண்டு வடிவங்களில் வழிபடப்படுகிறார். திரிபுர சுந்தரியாகவும் திரிபுரா பைரவியாகவும் முதல் தேவி வணங்கப்படுகிறார். இரண்டாவது தேவி, சின்னமஸ்தா என்று அழைக்கப்படுகிறார். விநாயகருடன் கூடிய திரிபுர சுந்தரி, ரிஷியாகவும், ராவணாசுரனுடன் கூடிய சின்னமஸ்தா, மற்றொரு ரிஷியாகவும் வணங்கப்படுகின்றனர். ஜெய் துர்கா சக்தி பீடம் சித்த பூமியாக அழைக்கப்படுகிறது. சிவபெருமான் சக்தி தேவியின் உடலுடன் பிரபஞ்சத்தில் திரிந்தபோது, சக்தி தேவியின் இதயம் இவ்விடத்தில் விழுந்ததால் சிவபெருமான் அவரது இதயத்தை தகனம் செய்தார். அதனால் இத்தலம் சித்த பூமி என்று அழைக்கப்படுகிறது.

பைத்யநாத்

பைத்யநாத்.ஜோதிர்லிங்க கோயில் பாபா தாம் என்றும் பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவரிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அகற்றப்பட்டு, அவர் ஆன்மிக வளர்ச்சியைப் பெற நல்ல பாதையில் செல்ல வழிநடத்தப்படுகிறார். இதன் காரணமாகவே இத்தலம் பைத்யநாத் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயில் கோபுரத்தில் உயரமான தங்க கலசங்கள் அமைந்துள்ளன. அவை கித்தௌர் மன்னரால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சில குட வடிவிலான அமைப்பும் காணப்படுகின்றன. கோயிலுக்குள் சந்திரகாந்த மணி என்று அழைக்கப்படும் எட்டு இதழ் தாமரை மலர் வடிவில் மணி உள்ளது. கோயிலில் தரையில் புதைந்தபடி இருக்கும் ஆவுடையார் நடுவே சிறிய அளவிலான லிங்கமாக பைத்யநாத் அருள்பாலிக்கிறார். மேற்பகுதி சற்று உடைந்து காணப்படுகிறது.

கோயில் அமைப்பும் சிறப்பும்

கோயில் வளாகத்துக்குள் வைத்தியநாதரின் பிரதான கோயிலுக்கு நேர் எதிரில் ஜெயதுர்கா சக்தி பீடம் அமைந்துள்ளது. இரண்டு கோயில்களும் அவற்றின் உச்சியில் சிவப்பு நிற பட்டு நூல்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரு உச்சிகளையும் பட்டுடன் கட்டும் தம்பதிகள், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவர் என்பது ஐதீகம்.

வைத்தியநாதர் கோயில் 72 அடி உயர அமைப்புடன் அமைந்துள்ளது. கோயிலுக்குள் துர்க்கை மற்றும் பார்வதி தேவியின் விக்கிரகங்கள் ஒரு பாறை மேடையில் உள்ளன. பக்தர்கள் மேடை மீது ஏறி அம்பாளுக்கு பூக்கள் மற்றும் பால் சமர்ப்பிக்கின்றனர். பல தந்திரிகள் வந்திருந்து ஜெயதுர்க்கைக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்வதுண்டு. மா சந்தியா எனப்படும் காமாக்யா தேவிக்கு தனிக்கோயில் உள்ளது. கருவறைக்கு வெளியே நீல் சக்ரம் என்ற எந்திரம், பாறையின் மேல் பொறிக்கப்பட்டுள்ளது.

அன்னபூரணி, சரஸ்வதி, ஜகத்ஜனனி, லட்சுமி நாராயணர், ஆஞ்சநேயர் சந்நிதிகள் என்று 22 சந்நிதிகள் உள்ளன. வலப்புறம் நந்திதேவரும், உமையம்மைக்கு காவலராக பைரவரும் உள்ளனர். கோயிலில் வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், கதவுகள் காணப்படுகின்றன.

பன்னிரு ஜோதிர்லிங்கத் துதி

வைத்தியநாத ஜோதிர்லிங்கத்தின் அமைவிடம் குறித்து ‘வைத்தியநாதம் சித்தபூமௌ’ என்ற நூலும், ‘சிவமகாபுராண சதருத்ரா சங்கிதை’ என்ற நூலும் கூறுகின்றன. அவற்றின்படி வைத்தியநாதம் சித்தபூமி என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சித்தபூமி என்பது தேவ்கர் நகரின் பழைய பெயர் ஆகும். ஆதி சங்கரர் தனது பன்னிரு ஜோதிர்லிங்கத் துதியில் தேவ்கர் வைத்தியநாத ஜோதிர்லிங்கத்தைப் பற்றி கூறியுள்ளார். எனினும் துவாதசலிங்க ஸ்மரணம் என்ற நூலில் மகாராஷ்டிர மாநிலத்தில் பரளி நகரில் உள்ள கோயில், ஜோதிர்லிங்கமாக கருதப்படுவதாக கூறப்படுகிறது. வைத்தியநாத ஜோதிர்லிங்கம், சக்கோட்டா, அருச்சுனா, சால் மரங்களைக் கொண்ட காட்டுப் பகுதியில் உள்ள நாரிகண்டே நகரில் அமைந்துள்ளது என்று பவிஷ்ய புராணம் தெரிவிக்கிறது.

வைத்தியநாதர் என்ற திருநாமத்துடன் சிவபெருமான் ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கர் நகரிலும், மகாராஷ்டிர மாநிலம் பரளி பகுதியிலும், இமாச்சலப் பிரதேச மாநிலம் பைஜ்நாத் பக்தியிலும் அருள்பாலிக்கிறார். இத்தலங்களில் எது ஜோதிர்லிங்கத் தலமாகப் போற்றப்படுகிறது என்ற சர்ச்சை இன்றும் நிலவுகிறது.

ஆவணி மேளா

ஆவணி மாதத்தில் ‘சிராவண மேளா’ என்ற திருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படும். இதில் 8 முதல் 10 மில்லியன் அடியார்கள் பங்கேற்கின்றனர். ஆவணி மாதத்தில் சுல்தான் கஞ்ச் என்ற இடத்தில் இருந்து, பக்தர்கள் கங்கை நீர்சேகரிக்கப்பட்ட கலசங்களை கட்டி காவடி போல் எடுத்துக்கொண்டு 100 கிமீ தூரன் கால்நடையாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்கின்றனர். சிலர் 24 மணி நேரத்தில் இந்த தொலைவைக் கடந்துவிடுவர்.

பக்தர்கள் ‘பம்’ என்ற சொல்லை சொல்லியவண்ணம் யாத்திரை மேற்கொள்வர். (பம் - ப + அ + ம) தங்களைப் படைத்த பிரம்மதேவருக்கும், யாத்திரை போகும் வழியில் தங்களைப் பாதுகாக்கும் திருமாலுக்கும், துன்பத்தை மாய்க்கும் சிவபெருமானுக்கு நன்றி கூறுவதாக இச்சொல் அமைகிறது.

ஜடாமுடி

தேவ்கர் மத்திய சிறைச்சாலையில் இருந்து பிரத்யேகமாக மலர் ஜடாமுடி வரும். அதைக் கொண்டு போலேநாத் சிரசை அலங்கரிப்பது வழக்கம். தேவ்கர் சிறையில் ஆங்கிலேய ஜெயிலராக இருந்தவரின் மகன் கடல் பயணத்தின்போது காணாமல் போனார். வைத்யநாத்ஜியை வணங்கிய பின்னர், காணாமல் போனவர் உயிருடன் இருப்பதாக தகவல் வந்தது. மகிழ்ந்த ஜெயிலர், நன்றிக்கடனாக தினமும் சிறை நந்தவனத்தில் இருந்த மலர்களால் ஜடாமுடி போன்ற மலர்க்கிரீடம் செய்து சிவபெருமானுக்கு அளித்தார். அது இன்றும் நடைபெறுகிறது.

திருவிழாக்கள்

சிவராத்திரி, நவராத்திரி, ஹோலி, தீபாவளி, கார்த்திகை, ஜனவரி பஞ்சமி மேளா, மாசி பிரம்மோற்சவம், பங்குனி உத்திர விழா, பௌர்ணமி உள்ளிட்ட தினங்களில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

x