’’ஒரு கோயிலை புனர் நிர்மாணம் செய்வது என்பது மிகச்சிறந்த பணி. அந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது என்பது மிகப்பெரிய பணிகளில் ஒன்று. அப்படி புனரமைப்பதற்கே பணம் செலவு செய்தாகவேண்டும். இப்போது புதிதுபுதிதாகக் கோயில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதைக்காட்டிலும், பழைய கோயிலின் புனர் நிர்மாணப் பணிகளுக்கு உதவுங்கள். உங்களுக்கும் புண்ணியம்; உங்கள் மூதாதையர்களுக்கும் புண்ணியம்’’ என காஞ்சி மகான் என்று போற்றப்படும் மகா பெரியவா அருளியுள்ளார்.
பொதுவாகவே, எந்தவொரு நல்ல காரியத்துக்கும் நம்மால் முடிந்ததைச் செய்வது நமக்கு நற்பலன்களைக் கொடுக்கும். ஒரு ஏழை மாணவனின் படிப்புக்கு நம்மால் முடிந்ததைச் செய்யச் சொல்கிறார்கள். பசிப்போருக்கு இல்லையென்று சொல்லாமல் உணவு வழங்கச் சொல்ல அறிவுறுத்துகிறது சாஸ்திரம். அதேபோல், கோயில்களின் புனரமைப்புப் பணிகளுக்கு நம்மால் முடிந்ததைச் செய்வது நம் முன்னோர்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்; நமக்கும் புண்ணியம் கிடைக்கும்; நம் சந்ததிகளுக்கும் புண்ணியம் சேரும் என்கிறது தர்ம சாஸ்திரம். இதைத்தான் ஒவ்வொரு தருணத்திலும் மக்களிடம் எடுத்துரைத்துக் கொண்டே இருந்தார் காஞ்சி மகான்.
’’கோயில் திருப்பணிக்கு நம்மால் என்ன கொடுக்கமுடியுமோ கொடுக்கவேண்டும். அது ஒரு சந்நிதிக்கான செலவை ஏற்றுக் கொள்வதாக இருக்கலாம். பின்னமடைந்த கல் விக்கிரகத்துக்குப் பதிலாக, வேறொரு விக்கிரகம் அமைத்துக் கொடுக்கலாம். சுவாமி மற்றும் அம்பாள் வீதியுலா வருவதற்கு வாகனங்கள் செய்து கொடுக்கலாம். பிராகார வலத்தில் பக்தர்கள் சிரமமின்றி நடப்பதற்கு வசதியாக பிராகாரப் பாதை அமைத்துக் கொடுக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு கோயிலின் திருப்பணிக்காக, ஒரேயொரு செங்கல்லை வழங்கினால் கூட அது புண்ணியத்தில் சேரும் என்று சாஸ்திரம் தெரிவிக்கிறது. அதாவது, நாம் தருகிற செங்கல்லானது, ஆலயத்தில் எத்தனை வருடங்கள் இருக்கிறதோ, அத்தனை ஆயிரம் வருடங்கள் நாம் கயிலாயத்திலோ வைகுண்டத்திலோ வாசம் செய்யலாம். நமக்கு மறுபிறவி கிடையாது’’ என்று விவரிக்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள், தாங்கள் செய்த தர்மத்தைப் பார்க்கவேண்டும் என்று டியூப்லைட்டில், வாத்தியங்களில் வளைவுகளில் தங்களின் பெயரைப் பதிவிட்டுக் கொள்கின்றனர். அப்படிப் பதித்துக் கொள்வதால் எந்தப் பலனுமில்லை. நாம் கோயில் கட்டுமானத்துக்கு வழங்குகிற செங்கல், கோயிலில் எந்தப் பகுதியில், எந்த செங்கல் என்பது எவருக்குமே தெரியாது. அவ்வளவு ஏன்... நமக்கே கூட தெரியாது.
’’கோயில் திருப்பணி எவ்வளவு புண்ணியமோ, அப்படித்தான் ஒருவருக்குக் கல்வியும். அதேபோல திருமணம் எனும் விவாகமும் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவே, ஒரு ஏழையின் திருமணத்துக்கு நம்மால் முடிந்ததைச் செய்வதும் சிவபூஜையில் ஈடுபடுவோருக்கு வஸ்திரமும் பூக்களும் பழங்களும் கற்பூரமும் வழங்குவதும் மகா புண்ணியம்’’ என சாஸ்திரங்கள் சொல்லியிருக்கின்றன.
நம் முன்னோர்களில் பலருக்கு மோட்சம் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கலாம். தவித்துக் கொண்டிருக்கலாம். கோயில் திருப்பணி, ஏழையின் கல்வி, திருமணம் என எதற்கேனும் தானம் வழங்கினால், அது முந்தைய ஏழு தலைமுறைக்கும் பிந்தைய ஏழு தலைமுறைக்கும் புண்ணியத்தைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!