நிலம், பூமி, மனை பிரச்சினைகள் தீர்க்கும் வாராஹி வழிபாடு!


வாராஹி தேவி

வெள்ளிக்கிழமையும் பஞ்சமி திதியும் இணைந்தநாளில், வாராஹி தேவியை வழிபட்டு வேண்டிக்கொண்டால், வேண்டியதையெல்லாம் தருவாள். மனை, வீடு, நிலம், பூமி முதலான பிரச்சினைகளும் வழக்குகளும் தீர்த்தருளுவாள் தேவி!

சக்தி என்று சொல்லப்படும் அம்பாள் பல ரூபங்களில் இருந்தபடி அருள்பாலிக்கிறாள். அவளின் வடிவங்களில் சப்த மாதர்களும் உண்டு என்கிறது புராணம். சப்தமாதர்களில் மிக முக்கியமான தேவியாகத் திகழ்கிறாள் வாராஹி அம்மன். மிகவும் உக்கிரமும் சக்தியும் வாய்ந்தவள் வாராஹி தேவி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

சோழர்கள் காலத்தில்தான் சப்தமாதர்கள் வழிபாடு மேலோங்கியதாகச் சொல்கிறது வரலாறு. அதேபோல் சோழ மன்னர்கள் கட்டிய பல ஆலயங்களில் சப்தமாதர்கள் சந்நிதி அமைக்கப்பட்டிருப்பதைத் தரிசிக்கலாம். மாமன்னன் ராஜராஜ சோழன் போருக்குச் செல்வதற்கு முன்னதாக வாராஹி தேவியை வழிபட்டு படையலிட்டான் என்று கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெற்றிகளை வாரித்தருபவள் வாராஹி தேவி.

வித்தியாசமான தோற்றம் கொண்டவள் வாராஹி தேவி. பெண்ணின் உடலும் பன்றியின் முகமும் கொண்டவளாகத் திகழ்கிறாள். அதேபோல் வைஷ்ணவத்தில் ஆணின் உடலும் பன்றியின் முகமுமாகத் திகழ்கிறார் வராஹ மூர்த்தி. தவம் செய்யும் முனிவர்பெருமக்களையும் ஞானிகளையும் கொடுமைப்படுத்தி அச்சுறுத்திய அசுரக் கூட்டத்தை அழித்தொழித்தவள் வாராஹி தேவி. ஆகவே, தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும் வாராஹிக்கு முன்னே நின்று வணங்கினாலும் அவர்களை மன்னிக்கவே மாட்டாள். அவர்களுக்கான தீர்ப்பும் தண்டனையும் வழங்கக் கூடியவள் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

அதேசமயம், பிறரின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டு அல்லல்படுபவர்களையும் ‘நல்லதுக்கே காலமில்லையா? நான் எந்தத் தீமையும் செய்யாமல் கஷ்டப்படுகிறேன்’ என்று வருந்துபவர்களையும் கண்டு பொறுக்கமாட்டாள். உடனே அவர்களுக்கு நன்மைகளை வாரி வழங்கியருளுவாள் தேவி.

வாராஹி தேவியானவள், சங்கு சக்கரத்துடன், படியும் கலப்பையும் கொண்டு எட்டுத் திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். எனவே, விவசாயிகளின் காவல்தெய்வம் என்று போற்றப்படுகிறாள். வாராஹி தேவியை மகாலட்சுமியின் அம்சம் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஆகவே, மகாலட்சுமிக்கு உரிய வெள்ளிக்கிழமையும் வாராஹி தேவிக்கு உரிய பஞ்சமியும் இணைந்து வரும் நாள் ரொம்பவே விசேஷமானது. மகாலட்சுமிக்கு சார்த்துவது போலவே சிகப்புத் தாமரையை சார்த்தியும் செவ்வரளி மாலை சார்த்தியும் வாராஹியை வழிபட்டால், வளம் அனைத்தும் தருவாள். விவசாயம் காப்பாள். செய்யும் தொழிலை மேன்மையுறச் செய்வாள் என்று சொல்லி சிலாகிக்கிறார்கள் வாராஹி பக்தர்கள்.

இன்று அக்டோபர் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி நன்னாள். இந்த நன்னாளில், வாராஹி தேவியை வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம். தனம் தானியம் பெருக்கித் தருவாள். இல்லத்தில் தம்பதி ஒற்றுமை பலப்படும் என்பது ஐதீகம்.

வெள்ளிக்கிழமையும் பஞ்சமி திதியும் இணைந்திருப்பது இன்னும் மகத்துவம் வாய்ந்தது. தேய்பிறை பஞ்சமியில் வாராஹி தேவியை மனதார வீட்டிலிருந்தும் வழிபடலாம். அருகில் வாராஹி தேவிக்கு கோயிலோ சந்நிதியோ இருந்தால் அங்கு சென்று தரிசித்தும் வழிபட்டுப் பிரார்த்தனை செய்துகொள்ளலாம். தேய்பிறை பஞ்சமியில் வாராஹி தேவியையும் வராஹ மூர்த்தியையும் வழிபட்டு வணங்கினால், நிலம், பூமி, மனை தொடர்பான சிக்கல்களில் இருந்தும் வழக்குகளில் இருந்தும் நம்மை மீட்டெடுத்து அருளுவாள் வராஹி தேவி என்கின்றனர் பக்தர்கள்.

x