புத்தியில் தெளிவு தரும் புதன் பகவானுக்கு 17 தீபங்கள்!


ஏதேனும் தவறாக ஒரு காரியத்தைச் செய்துவிட்டாலோ, அல்லது அரையும் குறையுமாகச் செய்துவிட்டாலோ, காரியத்தையே மறந்துவிட்டாலோ... நம்மைப் பார்த்து ஒருவர் கேட்பது... “என்ன புத்திகித்தி கேட்டுப் போச்சா?” என்பதுதான். அப்படி கெட்டுப் போகாமல் காரியம் யாவிலும் கைகொடுக்கும் தெய்வமாகத் திகழ்கிறார் புதன் பகவான்.

நம் புத்தியைத் திறம்பட ஆட்டுவிப்பவன் புதன் பகவான்தான். புதன் என்பதில் இருந்து வந்ததுதான் புத்தி எனும் வார்த்தை என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதனால் எந்தவொரு காரியத்தைச் செய்யத் தொடங்கும் போதும், ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று சொல்லிவைத்தார்கள். புதன் என்பது புதன் பகவானையும் புதன்கிழமையையும் குறிக்கிறது.

நவக்கிரகங்களின் ஆதிக்கத்தைக் கொண்டுதான் நாம் செயல்படுகிறோம். அதாவது நம்மைச் செயல்பட வைப்பதே நவக்கிரகத்தின் ஆதிக்கம்தான். அந்தக் கிரகங்களின் தாக்கங்களுக்குத் தக்கபடியே, நம் வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் அமைகிறது. பள்ளமும் மேடுமாக வாழ்க்கை மாறிமாறி ஏற்படுகிறது. வெற்றியும் தோல்வியும் கலந்துகட்டி நம்மை ஆக்கிரமிக்கின்றன.

சகல கிரகங்களின் தாக்கங்களில் இருந்து எவருமே தப்பமுடியாது என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதேசமயம், வழிபாடுகளாலும் பூஜைகளாலும் மந்திர ஜபங்களாலும் அந்தத் தாக்கத்தின் வீரியங்களைக் குறைத்து, நல் திசையில் பயணிக்க அந்தக் கிரகங்களே நமக்குப் பேருதவி செய்யும். அரணென இருந்து நம்மைக் காக்கும் என்பது ஐதீகம்.

’நமக்கு இன்னின்ன பிரச்சினைகள் இருக்கின்றன. இதிலிருந்து விடுபட என்ன செய்வது?’ என்று நாம் கொஞ்சம் நிதானமாகவும் தெளிவாகவும் யோசிப்பதற்குத்தான் புதன் பகவானின் அருள் தேவைப்படுகிறது. புதன் பகவானை தொடர்ந்து பிரார்த்தனை செய்துவந்தால், நம் புத்தியில் தெளிவு உண்டாகும். செய்யும் காரியங்களில் தெளிவையும் தீர்க்கத்தையும் தந்தருளுவார் புதன் பகவான்.

சிவாலயங்களில் இருக்கும் நவக்கிரகத்தில் ஒரு கிரகமாக புதன் பகவானும் இருந்து அருள்பாலிக்கிறார். நவக்கிரகத் திருத்தலங்கள் என்றும் இருக்கின்றன. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை முதலான ஊர்களைச் சுற்றி நவக்கிரகத் தலங்கள் அமைந்திருக்கின்றன.

சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து சில கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது திருவெண்காடு திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர். நவக்கிரக தலங்களில் இதுவும் ஒன்று. இதை புதன் பரிகாரத் திருத்தலம் என்று போற்றுகின்றனர். இங்கே தனிச்சந்நிதியில் புதன் பகவான் எழுந்தருளி அற்புதமாகக் காட்சி தருகிறார்.

ஒருவரின் வாழ்க்கையில் புதன் திசை என்பது 17 வருடங்கள் நீடிக்கும் என்றும், எனவே புதன் பகவானுக்கு 17 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வது வளமும் நலமும் தனமும் ஐஸ்வர்யமும் தந்தருளும் என்பதும் ஐதீகம். அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று புதன்கிழமை தோறும் புதன் பகவானுக்கு 17 தீபங்கள் ஏற்றி வருவது இன்னல்களையெல்லாம் போக்கவல்லது. தொடர்ந்து 17 புதன்கிழமைகள், புதன் பகவானுக்கு 17 தீபங்கள் ஏற்றி வணங்கி, 17 முறை நவக்கிரகத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்து வந்தால், நம் வாழ்வில் இதுவரையில் நம்மை இம்சித்து வந்த பிரச்சினைகள் மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும். மங்கல காரியங்கள் நடைபெறும். நல்ல உத்தியோக பாக்கியம் கிடைக்கப்பெற்று, வாழ்வில் உயரச் செய்வார் புதன் பகவான்!

முடிந்தால், ஒருமுறை... திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் தலத்துக்குச் சென்று புதன் பகவானைப் பிரார்த்தனை செய்து வருவது இன்னும் பலத்தையும் மனத்தெளிவையும் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

x