புரட்டாசி புதன்கிழமையில் சக்கரத்தாழ்வாரைத் தரிசிப்பதும் பிரார்த்தனை செய்வதும் மும்மடங்குப் பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாளான புதன்கிழமையும் சனிக்கிழமையும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் தாயாரையும் பெருமாளையும் தரிசிப்பதுடன் சக்கரத்தாழ்வாரை மனதாரப் பிரார்த்தனை செய்வதும் மகத்தான விஷயங்களாகப் போற்றிச் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதிலும் புரட்டாசி மாதம் என்பது ரொம்பவே விசேஷமானது. புரட்டாசி மாதம் முழுவதுமே மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம் என்கிறது விஷ்ணு புராணம். இந்த மாதத்தில், மகாவிஷ்ணுவுக்கு விரதம் மேற்கொள்வதும் ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களைச் சொல்லி ஜபிப்பதும் இல்லத்தில் நல்ல அதிர்வுகளைத் தரும். ஆலயங்களுக்குச் சென்று முறைப்படி பெருமாளை கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்வது இன்னும் நல்ல அதிர்வுகளை நமக்குள் உண்டுபண்ணும்.
பெருமாள் கோயில்களில், கருடாழ்வார் சந்நிதி ரொம்பவே முக்கியம். அதேபோல் அனுமனுக்கும் சந்நிதி அமைந்திருக்கும். ஆஞ்சநேயரிடம் நம் கோரிக்கை வைப்பதும் நன்மைகளைத் தரும். பிரகார வலம் வரும்போது, ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கும் சந்நிதி இருக்கும்.
சங்குசக்கரதாரி என்று மகாவிஷ்ணுவைச் சொல்லுவார்கள். பெருமாளின் வாகனம் கருடன். தன் வாகனமான கருடனுக்கு ஆழ்வார்பட்டம் கொடுத்து முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் திருமால். அதனால்தான் கருடாழ்வார் என்கிறோம். அதேபோல், தன் சக்ராயுததுக்கும் மரியாதை கொடுத்து, தனிச்சந்நிதியில் எழுந்தருளச் செய்திருக்கிறார் பெருமாள். அதனால்தான் சக்கரத்தாழ்வார் என்று போற்றி வணங்குகிறோம்.
பெருமாளின் திருக்கரத்தில் உள்ள ஸ்ரீசக்கரம், துன்பங்களையும் துயரங்களையும் அழிக்கவல்லது. துர்குணங்கள் கொண்டவர்களைத் துவம்சம் செய்யக்கூடியது. எதிர்ப்புகளையும் தீயசக்திகளையும் நம் மீது அண்டவிடாமல் காத்தருளும் வல்லமை கொண்டது. அதனால்தான் ஸ்ரீசக்கரத்தாழ்வார் வழிபாடு, வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வார் பிரம்மாண்டமான சந்நிதியில் கோயில் கொண்டு சேவை சாதிக்கிறார். இவரை வாரந்தோறும் புதன் அல்லது சனிக்கிழமைகளில் வந்து தரிசித்துப் பிரார்த்தித்துச் செல்கிறார்கள்.
இதேபோல், மதுரை ஒத்தக்கடை அருகில் உள்ள திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் திருக்கோயிலும் விசேஷம். இங்கேயுள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரும் வரப்பிரசாதி. மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருப்பவர்கள், புதன் அல்லது சனிக்கிழமைகளில் தவறாமல் திருமோகூர் திருத்தலத்துக்கு வந்து, பெருமாளையும் தாயாரையும் ஸேவித்துவிட்டு, ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதியில் அவருக்கு எதிரே பத்துநிமிடம் அமர்ந்து கண்மூடி வேண்டிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து 9 வாரங்கள் அல்லது 11 வாரங்கள் என சக்கரத்தாழ்வாரை வந்து தரிசித்து, துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், நாம் நினைத்த காரியத்தை நடத்தித் தருவார்; நாம் கேட்ட வரங்களை வழங்கி அருளுவார் சக்கரத்தாழ்வார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.