ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ தேரோட்டம்


ஸ்ரீவில்லிபுத்தூர்: பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத் தூரில் நேற்று ஆண்டாள் கோயில் செப்புத் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரிய தலமாகும். இங்கு பெரியாழ்வார், ஆண்டாளின் அவதார நட்சத்திரம், ஆண்டுதோறும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவம் கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு ராமர், கண்ணன், ஆண்டாள், பெரிய பெருமாள் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் பெரியாழ்வார் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

செப்புத் தேரில்... விழாவின் முக்கிய நிகழ்வான செப்புத் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பெரியாழ்வார் சர்வ அலங்காரத்தில், மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து செப்புத் தேரில் (கோ ரதம்) எழுந்தருளினார்.

காலை 8 மணிக்குத் தேரோட்டம் தொடங்கி, ரத வீதிகள் வழியாக நடைபெற்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. திருப்பல்லாண்டு பாடியபடி வைணவ ஆச்சாரியர்கள் முன்னே செல்ல, தேரோட்டம் நடைபெற்றது. வில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் லட்சுமணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

x