9 சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு எள் தீபம்; நம் பாவத்தையெல்லாம் மன்னிப்பார்!


நவக்கிரகம்

சனிக்கிழமைகளில், சனி பகவானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். தொடர்ந்து ஒன்பது வாரங்களுக்கு எள் தீபம் ஏற்றி சனீஸ்வரரை வணங்கி வாருங்கள். நம் பாவங்களையெல்லாம் மன்னித்து அருளுவார் சனீஸ்வரர்.

ஒன்பது கிரகங்களில் எந்தக் கிரகத்துக்குமே இல்லாத சிறப்பு சனி கிரகத்துக்கு உண்டு. இருக்கிற கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம்... சனிதான். அதனால்தான் சனீஸ்வரர் என்று அழைக்கிறோம். சனி திசை நடக்கிறது, ஏழரைச் சனி நடக்கிறது, அர்த்தாஷ்டம சனி நடக்கிறது, பொங்குச் சனி நடக்கிறது என்று சனிப்பெயர்ச்சி வரும்போதெல்லாம் பயந்துகொண்டு ‘நமக்கு என்ன நேரப்போகிறது’ என்று வேண்டிக்கொண்டே பலன்களைப் பார்க்கிறவர்கள்தான் நாம். சனி பகவான் அருளிருந்தால்தான் நம் வாழ்வில் நல்லதுகளும் உயர்வும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

சனிக்கிழமைகளிலும் திங்கட்கிழமைகளிலும் சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வில்வத்தால் அர்ச்சித்தால், சனீஸ்வரரின் கோபப்பார்வையில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் ஜோதிடர்கள். சனிக்கிழமைகளில், காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலான ராகு கால வேளையில், சிவாலயத்துக்குச் சென்று, எள் தீபம் ஏற்றி வழிபடுவது நம் பாவங்கள் அனைத்தையும் போக்கும் என்பது ஐதீகம்.

சனீஸ்வரர்

அதேபோல், சனி பகவானுக்கு முன்னே தேங்காயை இரண்டாக உடைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி நிரப்பிக் கொண்டு, எள்ளை ஒரு துணியில் கட்டி, நல்லெண்ணெயில் வைத்து, தீபமாகவும் ஏற்றி வழிபடலாம்.

நீலாம்பரோ நீலவபு:

க்ரீடி க்ருத்ரஸ்தித

சத்ராஸக ரோ தநுஷ்மான் சதுர்புஜ:

ஸூர்யஸு: ப்ரசாந்த

ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன

- எனும் மந்திரத்தை ஒன்பது சனிக்கிழமைகளில், நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானை வேண்டிக்கொண்டு ஒன்பது முறை வலம் வந்து பிரார்த்தனை செய்து வந்தால், சனி கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்று விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சனிக்கிழமை என்றில்லாமல் தினமும் காகத்துக்கு உணவிடுவதும் புண்ணியத்தைத் தரும். காகத்தை முன்னோர்களின் வடிவமாகச் சொல்கிறது புராணம். அதேசமயத்தில் சனி பகவானின் வாகனமாகவும் விவரித்துள்ளது.

சனிக்கிழமைகளில், சனி பகவானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். தொடர்ந்து ஒன்பது வாரங்களுக்கு எள் தீபம் ஏற்றி சனீஸ்வரரை வணங்கி வாருங்கள். சனி கிரக தோஷம் மட்டுமின்றி, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்து அருளுவார். நாம் இதுவரை தெரிந்தோ தெரியாமலோ செய்த சகல பாவங்களையும் மன்னித்து அருளுவார் சனி பகவான்!

x